இனப்படுகொலை என நான் பேசியதாக பொய் செய்தி பரப்ப வேண்டாம்..!
சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப் படுகொலை செய்ய வேண்டும் என தான் ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை எதிர்ப்பதைவிட அதனை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.
சனாதன தர்மத்தைப் பின்பற்றும் இந்தியாவின் 80 சதவிகித மக்களை இனப்படுகொலை செய்ய உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுப்பதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது ’எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதேபோல ஒரு சாரார் கண்டனம் எழுப்பிய நிலையில், உதயநிதியின் பேச்சுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தனர். அதனை குறிப்பிட்டு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், சட்டப்போராட்டத்தை சந்திக்கத் தயார் என்றார். மேலும், திராவிட நிலத்தில் இருந்து சனாதனத்தை ஒழிக்கும் நோக்கம் சிறிதும் குறையாது என்று உதயநிதி டிவிட்டரில் பதிவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




