அமைச்சரின் ஆதரவாளர்களின் வீடுகளில் திடீர் ரெய்டு! கடலூரில் பரபரப்பு!!
கடலூரில், அதிமுக அமைச்சர் எம்.சி. சம்பத்தின் ஆதரவாளர்களது வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு நாட்கள் நெருங்கிவிட்டன. வரும் 6ம் தேதி நடக்கும் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவர, அரசியல் கட்சிகள் பணம், பரிசுப் பொருட்களை வழங்குவது சில இடங்களில் நடக்கிறது. அத்தகைய செயல்பாடுகள் இருப்பின் தகவலின் அடிப்படையில் அங்கு, வருமான வரித் துறை சோதனைகள் நடப்பது வழக்கம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக, மதிமுக, மக்கள் நீதிமய்யம் கட்சி பிரமுகர்களின் வீடுகள், நிறுவனங்களில் நேற்று வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொருளாளர் வீட்டில், இரண்டு நாளாகச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கணக்கில் காட்டப்படாத சுமார் 8 கோடி ரூபாய் பணம் சிக்கியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கடலூரில் அமைச்சர் எம்சி சம்பத்தின் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் 8 பேரின் வீடுகளில் இன்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சரின் ஆதரவாளர்களான சூரப்பன்நாயக்கன்சாவடியில் உுள்ள மதியழகன், பாலகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், மகேஷ்வரி உள்ளிட்ட 8 பேருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைப்பதாக கனிமொழி உள்ளிட்டவர்கள் கூறி வந்தநிலையில் தற்போது பாஜக கூட்டு சேர்ந்துள்ள அதிமுக அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்களின் வீடுகளில் ரெய்டு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




