“வீடுதேடி வாஷிங்மெஷின் வரும்” : டீ போட்டுத்தந்து அமைச்சர் உதயகுமார் பிரசாரம்
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வீட்டு காலிங் பெல்லைத் தட்டி வாஷிங் மெஷினை வழங்குவோம் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். அத்துடன், டீக்கடையில் தொண்டர்களுக்கு டீ போட்டுத்தந்து அசத்தினார்.
வரும் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் போட்டியிடுகிறார். தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அமைச்சர் உதயகுமார் இன்று கோபாலபுரம், செங்கப்படை, சிவரகக்கோட்டை ஆகிய பகுதிகளில் உதயகுமார் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடம் பேசிய அமைச்சர், அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இனி பொதுமக்கள், கேபிள் இணைப்புக்கான மாதாந்திரத் தொகையை செலுத்த வேண்டாம். இனி ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து மக்களுக்கு வழங்குவார்கள் என்றார்.
அவர் மேலும் பேசும்போது, உங்களால் தேர்ந்தெடுக்கப்படும் இந்த உதயகுமார், நேரடியாக உங்கள் வீட்டுக்கு வந்து காலிங் பெல்லை அடிப்பேன். கதவைத் திறந்தால் நானும் கட்சி நிர்வாகிகளும் நிற்போம். பின்னாலேயே நமது அரசு ஊழியர்களும் வந்து நிற்பார்கள். அவர்கள் வந்து புத்தம் புதிய வாஷிங் மெஷினை வீட்டில் வைத்து விடுவார்கள் என்றார்.
இதன் பின்னர், அப்பகுதியில் உள்ள சமத்துவபுரத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு வாக்கு சேகரித்தார். அங்குள்ள டீக்கடைக்குள் சென்று அங்கிருந்தவர்களுக்கு அமைச்சர் டீ போட்டுத் தந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




