இளைஞரை கொலை செய்து கோவில் வளாகத்தில் புதைத்த பெண்..!
பண்ருட்டியில் இளைஞர் ஒருவரை அடித்து கொலை செய்த வழக்கில் அவருடன் வாழ்ந்து வந்த பெண் உடந்தையாக இருப்பது அம்பலமாகியுள்ளது. பண்ருட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவரை காணவில்லை என்று அவருடன் வசித்து வந்த மஞ்சுளா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசாருக்கு பண்ருட்டி வேணுகோபால சுவாமி கோவில் அர்ச்சகர் கோபிநாத் அவரது நண்பர் திருப்பதி ஆகியோர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கு மஞ்சுளா உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் சந்தேகம் ஏற்படாமல் இருக்க கண்ணதாசனை காணவில்லை என்று போலீசில் அவர் புகார் அளித்து நாடகம் ஆடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கண்ணதாசனை கொலை செய்த வேணுகோபால சுவாமி கோவில் வளாகத்தில் புதைத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இரவோடு இரவாக கண்ணதாசன் சடலத்தை தோண்டி எடுத்த போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மஞ்சுளா கணவனைப் பிரிந்து கண்ணதாசனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
அர்ச்சகருக்கும், மஞ்சுளாவுக்கும் தகாத உறவு இருந்து வருவதாக கூறப்படுகின்றது. இதனை கண்ணதாசன் கண்டித்ததால் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






