--- --:--:-- --

டி.கே.சிவக்குமாரின் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது

5

மேகதாது அணை மாண்டியா மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்காக கட்டப்படுகிறது என்ற கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரின் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடகத்தின் உள்நோக்கத்தை காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எடுத்துரைக்க வேண்டும் என மன்னார்குடியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

 

 

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் குறுவையை இழந்துள்ளோம். தற்போது சம்பாவையும் இழக்கக்கூடிய பேராபத்து ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் 54 அடி தண்ணீர் உள்ள நிலையில் டிசம்பர் ஜனவரி மாதத்திற்கு சம்பா கதிர் வரும் நிலையில் தண்ணீர் இன்றி காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து வறட்சி நிவாரண நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவேண்டும்.

 

 

கர்நாடக முதலமைச்சர் டி கே சிவக்குமார் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது கர்நாடகாவில் மாண்டியா மாவட்ட விவசாயிகளுக்கான பாசனத்திற்காக மேகதாது அணை கட்டப்படுவதாகவும், 2500 ஏக்கர் வனத்திற்கு மாற்றாக இடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெங்களூர் நகர குடிநீருக்கு என்கிற பெயரில் மத்திய அரசிடம் மேகதாது அணைக்கு அனுமதி கோரியது.

 

 

தற்போது கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே சிவகுமாரின் கருத்து உண்மை நிலையை உலகுக்கு எடுத்துரைத்துள்ளது. மத்திய அரசு உடனடியாக விரிவான வரைவு திட்ட அறிக்கை என்கிற பெயரில் போலியான மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளது. குறிப்பாக தமிழகம் புதுச்சேரி மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் விரிவான வரைவு திட்ட அறிக்கை என்பது செல்லத்தக்கதல்ல, உடனே மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.

 

 

தமிழக முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சரின் கருத்துக்கு உடனடியாக சட்டப்படியான மறுப்பை தெரிவிக்க முன்வர வேண்டும். மேலும், உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்ட முன்வர வேண்டும். குத்தகை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம் விதிவிலக்கு பெற்று காப்பீடு செய்ய தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

இதுகுறித்து வேளாண்மை துறை அமைச்சர் மற்றும் வேளாண் துறை செயலாளர், இயக்குனர் ஆகியோரிடத்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம். மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்கிற பன்னாட்டு நிறுவனம் த.வெ.க தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் காவிரி டெல்டாவை விட்டு வெளியேறி விட்டதாக அறிவித்துள்ளது.

 

 

2016 -ல் தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் என்னால் (பி.ஆர்.பாண்டியன்) தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கொள்கை முடிவு எடுத்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது. விரைவில் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அறிவிக்கப்படும். புதிய கிணறுகள் அமைக்கவோ, வெடிவைத்து ஆய்வு செய்யவோ மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்காது என உத்தரவாதமளித்தது.

 

 

2020-ல் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அறிவித்தது. ஆனால் இதுவரையிலும் மௌனமாக இருந்துவிட்டு, தற்போது வெளியேறுகிறேன் என அறிவித்துள்ளது விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon