சென்னைக்கு மிக அருகில் முரசு புயல்.. !
சென்னைக்கு மிக அருகில் முரசு புயல் உள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளுவரில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக்கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் முரசு புயல் உள்ளது. சென்னைக்கு வடகிழக்கே 150 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் திருவள்ளுவரில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக்கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மாலை வரை காற்றின் வேகம் அதிகரிக்கும். அதன் காரணமாக வடகடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் மிகப்பெரிய அளவிலான அலைகள் சென்னையில் உருவாக வாய்ப்பு குறைவு. இன்று மாலை முதல் நாளை காலை 8.30 மணி வரை கன முதல் மிகக்கனமழை திருவள்ளுவர், சென்னையில் பெய்யக்கூடும். நெல்லூருக்கும் நரசாப்பூருக்கும் இடையே நாளை அதிகாலையில் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நவம்பர் 7-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு, தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 15 ஆம் தேதிக்கு மேல் புயலுக்கு வாய்ப்புள்ளது. நவம்பர், டிசம்பர் மாதத்தில் உருவாகும் புயல்கள் தமிழகத்தை நோக்கி வரும் என்றும் தெரிவித்தார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று (01.11.26) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய புயல் (முரசு) (Cyclonic Storm) வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (02.11.2026) அதிகாலை 02:30 மணிஅளவில் தீவிர புயலாக (severe cyclonic storm) வலுவடைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08:30 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே தீவிர புயலாக இன்று நள்ளிரவு 23:30 மணிமுதல் நாளை (03.11.2026) அதிகாலை 04:00 மணிக்குள் கரையைக்கடக்கக்கூடும்.
சுமார் 3.1 கிமீ உயரத்தில் தெற்கு கேரள பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. 02.11.2026 சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





