6 மாதங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரும் மாற்றம் வருமாம் பாஜக தலைவர் எல்.முருகன் பரபரப்பு பேச்சு..!
6 மாதங்களில் தமிழக அரசியலில் மிகப் பெரும் மாற்றம் ஏற்படும் எனவும், அடுத்த சட்டசபையில் பாஜகவுக்கு கணிசமான எம்எல்ஏக்கள் இருப்பார்கள் எனவும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாஜகவை காலூன்றச் செய்ய கங்கணம் கட்டியது போல் அக்கட்சித் தலைவர்கள் சமீப காலமாக கருத்துக்களை கூறி வருகின்றனர். இதில் பாஜக தலைமையில் கூட்டணி என்றும், அடுத்த ஆட்சியில் பாஜகவும் இடம் பெறும் என்றெல்லாம் பாஜக தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் வி.பி.துரைசாமி போன்றோர் கூறி வருவது, தற்போது கூட்டணியில் பெரும் கட்சியான ஆளும் அதிமுகவிலேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் இந்த நெருக்கடிகளுக்கு இடையே, அதிமுகவுக்குள்ளேயே முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கலகம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஸ் இடையே புகைந்து கொண்டிருந்த கருத்து வேறுபாடு நேற்று வெட்ட வெளிச்சமானது. மூத்த அதிமுக அமைச்சர்கள் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண நேற்று அடுத்தடுத்து எடப்பாடியையும், ஓபிஎஸ்சையும் இருமுறை சந்திப்பு நடத்தி ஒரு வழியாக இருவரையும் சேர்ந்து கூட்டாக அறிக்கை வெளியிடச் செய்தனர். ஆனாலும் வரும் நாட்களில் ஓபிஎஸ்-இபிஎஸ் மோதல் பெரிதாக வெடிக்கும் என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் கட்சி அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளிடம் பேசிய அக் கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த 6 மாதத்தில் தமிழக அரசியலில் மிகப் பெரும் மாற்றம் ஏற்படும். பாஜக கை காட்டும் கட்சியே அடுத்து ஆட்சி அமைக்கும் என எல்.முருகன் பேசியது தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இக் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகனிடம், அதிமுக – பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எல்.முருகன், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியே சட்டசபை தேர்தலிலும் தொடரும் என புது விளக்கம் கொடுத்தார்.
மேலும் அடுத்த சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் கணிசமான அளவில் இடம் பெற்றிருப்பார்கள் என்றும் எல்.முருகன் கூறியிருப்பதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பாபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 மாதத்தில் தமிழக அரசியலில் மிகப் பெரும் மாற்றம் வரும் என்று எல்.முருகன் குறிப்பிட்டது அதிமுகவில் ஏற்பட்டுள்ள கோஷ்டிப் பூசலை மனதில் வைத்தே கூறியிருப்பதாகவும் தெரிகிறது.






