கொரானா வைரஸ் தாக்கத்திலிருந்து உலகம் மீண்டு வருவதற்கு இந்தியா – அமெரிக்கா இடையிலான கூட்டுறவு ஒரு முக்கிய பங்காற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி அந்நாட்டு தொழிலதிபர்களை இந்தியாவில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்தார்.
இந்தியா, அமெரிக்கா வர்த்தக கவுன்சில் சார்பில் நடைபெற்ற இந்தியா ஐடியா உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது உலக அளவில் பொருளாதார மீட்ச்சியை கொண்டு வருவதற்குத் தேவையான வாய்ப்புகள் நிறைந்த நாடாக இந்தியா மிளிர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
சுகாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்பு கடந்த காலங்களில் புதிய உயரங்களை தொட்டு இருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர் நோய்த்தொற்றுக்கு பிறகு உலகம் மீண்டு வருவதே இருநாட்டு உறவு முக்கிய பங்காற்ற வேண்டிய தருணம் இது என்று குறிப்பிட்டார்.
இந்தியாவின் காப்பீட்டு துறையில் 100% அந்நிய முதலீடுகள் தற்போது அனுமதிக்கப்படுவதால் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக முதலீடுகளை மேற் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் வேளாண் துறையில் முதலீடு செய்ய வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.