ஓயாத கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி காரணமாகவும், வீட்டிற்கு சென்றால் குடும்பத்தினருக்கு தொற்று பரவிவிடுமோ என்ற அச்சத்தாலும், விருந்தினர் மாளிகைகளில் தங்கி வந்த சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், 40 நாட்களுக்கு பிறகு தனது இரு மகள்களை சந்தித்ததாக நெகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா எனும் கொடுமையான வைரஸ் தொற்று ஒட்டுமொத்த மக்களின் அன்றாட வாழ்வையே தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது எனலாம். தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு போட்டு மக்களை முடங்கச் செய்ததால் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக வாழ்வு முறையே அடியோடு மாறிவிட்டது. கொரோனா பீதியில் அரசன் முதல் ஆண்டி வரை முகக் கவசத்தோடு அலைய வேண்டியதாகிவிட்டது.இப்படி ஒரு நிலைமை உலகம் இதுவரை சந்தித்ததில்லை என்றே கூறலாம்.
இதில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் முன் கள பணியில் நேரடியாக ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் முதல் மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் மட்டுமின்றி தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆட்சியாளர்கள், காவல் துறையினரின் அர்ப்பணிப்பு அளப்பரியது என்றே கூறலாம். கொரோனா நோயாளிகளுடன் நேரடித் தொடர்பு மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கும் எளிதில் தொற்று பரவும் அபாயத்தை கண்கூடாக பார்க்க முடிகிறது.
With my daughters after 40 days! pic.twitter.com/6jIsusC8Sj
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) July 21, 2020
இதனால் இவர்கள் பணி முடிந்து வீடு திரும்பி நிம்மதியாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது இந்த கொரோனா காலத்தில் காணாமல் போய்விட் டது. குடும்பத்தினருக்கு தொற்று பரவிவிடக் கூடாது என்ற அச்சத்தினால் வெளியில் விடுதிகள், ஓட்டல்களில் தங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.தமிழ்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நிலையும் இப்படித்தான் என்பதைப் போல் டுவிட்டரில் அவர் தமது இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளது நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பதிவில், 40 நாட்களுக்கு பிறகு என் இரு மகள்களுடன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதே போன்றுதான் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் நேற்று ஒரு பேட்டியில் கூறுகையில், தமது மனைவி, மகள், மாமியார், மாமனார் என 4 பேருக்கும் தொற்று பரவிய நிலையில் தமக்கு தொற்று பாதிப்பு இல்லை என்றும், தாம் வீட்டில் தங்காமல் அரசு விடுதியில் தங்கி வருவதாகவும் ராதா கிருஷ்ணன் கூறியிருந்தார். இந்த கொரோனா காலத்தில், தனிமைப்படுத்தல் என்ற காரணத்தால் பலரின் நிலைமையும் இப்படித்தான் உள்ளது.