பெண்களை ஏமாற்றிய காசி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு!
சமூக வலைதளம் மூலமாக பல பெண்களிடம் பழகி ஏமாற்றிய புகாரில் கைது செய்யப்பட்ட காசி என்ற சுஜி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, சைபர் கிரைம் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கடந்த ஏப்ரல் 24ம் தேதி காசி மீது கொட்டார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து காசி மீது கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க குமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் காசியின் தந்தை தங்கபாண்டியன் தாக்கல் செய்துள்ள மனுவில் காசி மீது வழக்குகள் எதுவும் இல்லாத நிலையில் நீதிமன்றத்தில் ஜாமீன் வழக்கு தாக்கல் செய்யப்படாத சூழலில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது சட்டவிதிகளை மீறியது என்று தெரிவித்துள்ளார்.
காசி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் அவர் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக தலைமை செயலாளர் பதில் தர உத்தரவிட்டு வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.






