சமூகநீதித்துறை மாணவர்களின் விடுதி உணவுக் கட்டணம் உயர்வு: அமைச்சர் வன்னி அரசு
சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரி விடுதி மாணாக்கருக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் வன்னி அரசு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பினையை அமைச்சர் வன்னியரசு எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
“சமூக நீதித்துறை விடுதி மாணாக்கருக்கு உணவுக் கட்டணம் (Food Allowance) உயர்த்தப்படுகிறது! 2026-2027-ஆம் ஆண்டிற்கான சமூக நீதித்துறையின் மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு எண்.1-இல் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ‘தரமான, சத்தான உணவு வழங்கும் பொருட்டு விடுதி மாணாக்கருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உணவுக் கட்டணம் உயர்த்தப்படும்’ மாண்புமிகு அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் விதமாக, சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் சமூகநீதி விடுதிகளில் தங்கி கல்விப் பயிலும் மாணாக்கருக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணத்தை உயர்த்தி 21.10.26 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளி / கல்லூரி விடுதிகள், உண்டு உறைவிடப்பள்ளிகள், தொண்டு நிறுவனங்களின் கீழ் செயல்படும் பள்ளி விடுதிகளில் தங்கி கல்விப் பயிலும் மாணவ / மாணவியருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணத்தை நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1400/-லிருந்து ரூ.1800/-ஆகவும், அதேபோல் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியரின் உணவுக் கட்டணத்தை நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1,500/-லிருந்து ரூ.2000/-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். அதற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ள உணவுப் பட்டியலும், மாதாந்திர தனிநபர் நுகர்வு பொருட்களின் அளவு படியும் வழங்கப்படும்.
இத்திட்டமானது ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி விடுதிகள் (859), தொண்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளி விடுதிகள் (18) மற்றும் கல்லூரி விடுதிகள் (292) என மொத்தம் 1,169 விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கருக்கும், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் (316), பழங்குடியினர் நல பள்ளி விடுதிகள் (38), வனத்துறை பள்ளிகள் (11), தொண்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளி விடுதிகள் (3) மற்றும் கல்லூரி விடுதிகள் (11) என ஆக மொத்தம் 379 பள்ளிகள் / கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணாக்கருக்கும் செயல்படுத்தப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





