--- --:--:-- --

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி!

8

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் சார்பில், 2026-27ஆம் ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் கூடிய நவீன மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், குறைந்த விலையில் ஹீரோ சைக்கிள்ஸ் (Hero Cycles) ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. ஒரு மிதிவண்டிக்கான விலை, மாணவர்களுக்கு ரூ. 7,235 ஆகவும், மாணவிகளுக்கு ரூ. 7,476 ஆகவும் என அனைத்து வரிகளும் உட்பட இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

 

இந்த ஹீரோ சைக்கில் நிறுவனம் மொத்தம் 5,32,388 மிதிவண்டிகள் தயாரித்து வழங்க உள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிடப்பட்ட விலையில் மிதிவண்டிகளை கொள்முதல் செய்தால், மொத்தச் செலவு ₹392 கோடியாக இருக்கும். ஆனால் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது ஒதுக்கப்பட்ட பட்ஜெட் ரூபாய். 277 கோடி ஆகும். பணி ஆணை (Work Order) வழங்கப்பட்ட பிறகு, இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

மாணவர்கள்: 2,37,133

மாணவிகள்: 2,95,255

மொத்த எண்ணிக்கை: 5,32,388 பேருக்கு நவீன மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.

 

மிதிவண்டிகள் IS 10613:2023 தரநிலைக்கு உட்பட்டு தயாரிக்கப்பட வேண்டும். ஏலம் கோரும் நிறுவனமே ஃபிரேம் மற்றும் ஃபோர்க்கை தயாரிக்க வேண்டும். அவற்றை வேறு நிறுவனங்களிடம் உற்பத்தி செய்வதற்கு ஒப்படைக்கக் கூடாது. மாணவர்களுக்கு மிதிவண்டி Lilac Mist நிறத்திலும், Army Green நிறத்திலும் வழங்கப்பட வேண்டும்.

 

 

ஃபிரேம், கேரியர், ஹேண்டில் பார் மற்றும் ஃபோர்க் ஆகியவை குறிப்பிட்ட வேதியியல் கலவை கொண்ட ERW ஸ்டீல் குழாய்களைக் கொண்டு IS 2039 மற்றும் IS 10613:2023 தரநிலைகளின்படி தயாரிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இலச்சினை குறைந்தபட்சம் 40 மி.மீ. விட்டத்தில் மிதிவண்டியின் ஃபிரேமில் உள்ள Head Tube அல்லது Seat Tube சந்திப்பில் அழியாத வகையில் லேசர் மூலம் பொறிக்கப்பட வேண்டும் அல்லது Tamper-proof rivet மூலம் பொருத்தப்பட வேண்டும்.

 

 

வழங்கப்படும் தலைக்கவசங்கள் IS 18808:2025 தரநிலைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். தண்ணீர் பாட்டில் IS 10910:1984 தரநிலைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். சுமார் 4,500 பள்ளிகளுக்கு, தலா 2 பராமரிப்பு கருவிகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

 

 

மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர் தனது சேவைப் பணியாளர்கள் மூலம் அவற்றை உடனடியாக சரிசெய்து தர வேண்டும்.

 

 

கொள்முதல் ஆணை பெறப்பட்ட நாளிலிருந்து 150 நாட்களுக்குள் மிதிவண்டிகள், தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் முழுமையாக விநியோகிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட வேண்டும். 11-ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த 2026-27-ஆம் கல்வியாண்டை முடிப்பதற்குள்ளாகவே மிதிவண்டிகளை விநியோகம் செய்யும் வகையில், பணிகள் தற்போது முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon