அரசு அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பலர் அரிய தொண்டாற்றி வருகின்றனர். ஆதிதிராவிடர் /பழங்குடியினர் மக்களின் முன்னேற்றத்திற்கு தங்களை இணைத்தும், அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டும் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதினை முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான, டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருது பெறுவதற்கான முக்கிய தகுதிகள்: ஆதிதிராவிடர் / பழங்குடியினர் சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் / பழங்குடியினர் சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் வாழ்க்கை தரம் உயர பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள் குறிப்பிடப்பட வேண்டும். இவ்விருதினை பெற தகுதியுடையோர் உரிய விண்ணப்ப படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு நேரிலோ (அ) அஞ்சலகம் மூலமாகவோ 30.11.2026-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




