அடுத்த 2-3 நாட்கள் தமிழகத்திற்கு முக்கியம் – பிரதீப் ஜான்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்று ‘அர்னாப்’ புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரபிக்கடல் காற்றழுத்தத் தாழ்வு பகுதியும் மிக முக்கியம் என பிரபல தனியார் வானிலை ஆய்வாளரும் எல்.நினோ தாக்க ஆய்வு குழு உறுப்பினருமான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, வங்கக்கடலின் கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்குப் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி, நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
தொடர்ந்து, அக்டோபர் 26-ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளது. அக்டோபர் 24-ஆம் தேதிக்கான முன்னறிவிப்பில் தமிழகத்தின் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரதீப் ஜான், இது தொடர்பாக அளித்த பிரத்யேக பேட்டியில், “கேரளாவுக்கு அருகில் அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த சுழற்சி நிலவுகிறது. அதேநேரத்தில் வட அந்தமான் பகுதியில் ஒரு நிலவும் காற்றழுத்த பகுதி மேலும் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்த அர்னாப் புயலால் நேரடியாக தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பில்லை. அதேநேரம் கேரளா பகுதியில் நிலவும் காற்று சுழற்சியானது, ஈரப்பதம் உள்ள காற்றை கிழக்கு நோக்கி இழுக்கிறது.
இதனால் தற்போது கொடைக்கானல், குன்னூர் பகுதிகள் அதிக மழை பெறுவதை பார்க்கிறோம். அத்துடன் கேரளாவுக்கு அருகில் உள்ள மாவட்டங்கள் அர்னாப் புயல் தீவிர புயலாக உருவாகும்போது, அரபிக்கடலில் பக்கத்தில் உள்ள காற்றழுத்தப்பகுதியை மீண்டும் தமிழகம் நோக்கி உள்நோக்கி இழுக்கிறது. இதனால் உள் மாவட்டங்கள் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட வட உள் மாவட்டங்களுக்கு ஞாயிறு இரவு மற்றும் திங்கள் கிழமைகளில் மழைக்கு வாய்ப்புள்ளதை பார்க்கிறோம். கடலோர பகுதிகளிலும் அர்னாப் புயலால் நேரடியான மழைக்கு தமிழகத்திற்கு கிடைக்கப்போவதில்லை. அது ஆந்திரா மற்றும் தெலுங்கானவிற்குத்தான் பாதிப்பு நேரடியாக இருக்கிறது” என்றும் அவர் விளக்கமளித்தார்.
முன்னதாக அரபிக்கடலில் நிலவும் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு பகுதியுடன் இந்த வானிலை அமைப்பு எவ்வாறு தொடர்புகொள்ளும் என்பது குறித்து Tamilnadu Weather man சமூக வலைதளப் பதிவில் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வங்கக்கடலில் இருந்து ‘அர்னாப்’ புயல் உருவாகும் சூழல் நிலவி வரும் நிலையில், அரபிக்கடலிலும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நீடிக்கிறது. இந்த இரு வானிலை அமைப்புகளின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு TWM Weather Watch சுவாரஸ்யமான விளக்கத்தைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், வங்கக்கடலில் உருவாகும் புயல் அரபிக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியைத் தன்னை நோக்கி இழுத்து, இறுதியில் அந்த அமைப்பைத் தன்னுடன் இணைத்துக்கொள்வது போன்ற சூழல் ஏற்படலாம் என உருவகப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. இயற்கையின் இரண்டு வானிலை அமைப்புகளுக்கு இடையிலான இந்தச் செயல்பாடு, அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் மழையின் தீவிரம் மற்றும் பரவல் எவ்வாறு இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முக்கியமானதாக இருக்கலாம் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





