வழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!
தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகளுடன் வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில், மசூதி மற்றும் தேவாலயங்களை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது மே 17ஆம் தேதி ஊரடங்கு முடிவடைவதால் மே 15 ஆம் தேதி அல்லது 16ம் தேதிகளில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில் தற்போதைய நிலையில் மத வழிபாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாது என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை சமாளிக்க போதுமான காவலர்கள் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களில் மத வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து உத்தரவுகள் இல்லை என்றும் தமிழக அரசு சுட்டிக்காட்டியது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.






