செயல்பட தொடங்கிய தொழிற்சாலைகள்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்
தமிழகத்தில் தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கியிருக்கும் நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து தொழிற்சாலைகளுக்கும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் உற்பத்தி பணிகள் தொடங்குவதற்கு முன்பு மாசு கட்டுப்பாட்டு கருவிகள், கழிவுநீர் மேலாண்மை நிலையங்கள் மற்றும் அவற்றின் இயந்திரங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு உற்பத்தி பணிகள் அனைத்தையும் அதற்கான தொழிலாளர்களை கொண்டு தொடங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைப்போல கழிவுநீர் மேலாண்மை தொட்டிகளை இயந்திரங்களின் மூலம் மட்டுமே சுத்தப்படுத்த வேண்டும் என்றும் அந்த பணியில் ஈடுபடுவோருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை தொழிற்சாலைகள் வழங்க வேண்டும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.






