நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் அலட்சியதால் சிவகங்கையில் ரேஷன் அரிசி விநியோகத்தில் குளறுபடி: குடும்ப அட்டைதாரர்கள் அலைக்கழிப்பு

Publish by: எம்.மகேஸ்வரன் --- Photo :


சிவகங்கை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் அலட்சியத்தால் குடோன்களில் இருந்து ரேஷன்கடைகளுக்கு சிறப்புத் திட்ட அரிசியை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அரிசி விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்டு குடும்ப அட்டைதாரர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

 

கரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அனைவரும் வீட்டிலேயே முடங்கியதால் பலர் வருமானமின்றியும், உணவுப்பொருட்கள் வாங்க முடியாமலும் தவிக்கின்றனர். இதையடுத்து அரசு சார்பில் நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த மாதம் ரூ.1,000 ரொக்கம், அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் இலவசமாக வழங்கப்பட்டது.

 

மேலும் பிரதமர் கரீப் கல்யாண் அன்னயோஜனா என்ற சிறப்புத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அரசு தெரிவித்தது. ஆனால் சிறப்புத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அரிசி ஏப்ரல் மாதம் வழங்கவில்லை.இதையடுத்து இந்த மாதம் வழக்கமாக வழங்கப்படும் மாதாந்திர அரிசியுடன், மே மாதத்திற்குரிய சிறப்புத் திட்ட அரிசி மற்றும் கடந்த ஏப்ரலில் விடுப்பட்ட சிறப்புத் திட்டத்திற்குரிய அரிசியில் 50 சதவீதம் சேர்த்து மொத்தமாக ரேஷன்கடைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளின் அலட்சியத்தால் குடோன்களில் இருந்து ரேஷன்கடைகளுக்கு சிறப்புத் திட்ட அரிசி அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது.இதனால் ரேஷன்கடைகளில் வழக்கம்போல் வழங்கப்படும் மாதாந்திரி அரிசி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. சிறப்புத் திட்ட அரிசி வழங்கவில்லை. மேலும் பாமாயில், துவரம் பருப்பும் 60 சதவீதம் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன.

 

இதனால் பலருக்கு பாமாயில், துவரம்பருப்பு வழங்கவில்லை. இதையடுத்து சிறப்புத் திட்ட அரிசி, பாமாயில், துவரம்பருப்பு பெற குடும்ப அட்டைதாரர்கள் மீண்டும் ரேஷன்கடைகளுக்கு செல்ல வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து குடும்ப அட்டைதாரர்கள் கூறியதாவது:ஏற்கனவே டோக்கன் பெற ஒருமுறை ரேஷன்கடைகளுக்கு சென்றோம். தற்போது மாதாந்திர அரிசி மட்டுமே வழங்குகின்றனர். இதனால் சிறப்புத் திட்ட அரிசிக்காக மீண்டும் கடைக்கு செல்ல வேண்டியுள்ளது.

 

அதேபோல் பாமாயில், துவரம்பருப்பு கிடைக்காதோர் தனியாக கடைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் இந்த மாதத்தில் மட்டும் 4 முறை ரேஷன்கடைக்கு செல்லும்நிலை ஏற்பட்டுள்ளது, என்று கூறினர்.கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ சிறப்புத் திட்ட அரிசி வருவதில் தாமதம் ஏற்பட்டதால் தேவையில்லாத குளறுபடி ஏற்பட்டது. தற்போது சிறப்புத் திட்ட அரிசி கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் விரைவில் சிறப்புத் திட்ட அரிசி வழங்கப்படும்,’ என்று கூறினார்.


Leave a Reply