--- --:--:-- --

தமிழில் நடித்த மலையாள நடிகை கைது

11

கொச்சியில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாகக் கூறி வீட்டிற்கு வரவழைத்து, ஒரு டாக்டரைத் தாக்கி கொள்ளையடித்ததாக மலையாளத் திரையுலகைச் சேர்ந்த இரு வளர்ந்து வரும் நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் புதிய திருப்பமாக, கைது செய்யப்பட்ட நடிகர்களில் ஒருவரின் உறவினர் அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

 

 

குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் நடிகை அதுல்யா சந்திரா (32), பிபின் பெரும்பள்ளி (43) மற்றும் பிபினின் கார் ஓட்டுநர் கே.பி. விஷ்ணு (31) ஆவர். இதில் ஓட்டுநர் விஷ்ணு மீது ஏற்கனவே 8 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கொச்சியில் உள்ள ஒரு முன்னணி பலநோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் 41 வயதான மருத்துவர் அளித்த புகாரின் பேரில், கொச்சி நகரக் காவல் துறையினர் வியாழக்கிழமை இந்த மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், தாக்குதல் நடத்துதல், குற்றவியல் மிரட்டல் மற்றும் கொள்ளை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

இரு வழக்குகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதால் முழுமையான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. “ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, இது வெறும் கொள்ளைச் சம்பவம் அல்ல; திட்டமிடப்பட்ட ஒரு பணப்பறிப்பு முயற்சியாகும். மருத்துவரை வரவழைத்து, அவரைத் தாக்கி, அவரிடமிருந்த மதிப்புமிக்கப் பொருட்களைப் பறித்துள்ளனர். அதுல்யாவால் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலில் தொடர்புடைய மேலும் 9 பேரைத் தேடி வருகிறோம்” என்று காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

 

காவல் துறையினர் கூறுகையில், இந்தச் சம்பவம் நவம்பர் 2-ம் தேதி இரவு நடந்துள்ளது. தனது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவசர மருத்துவச் சிகிச்சை தேவை என்றும் கூறி அதுல்யா அந்த மருத்துவரைத் தொடர்புகொண்டுள்ளார். “நடிகை அதுல்யாவை ஏற்கனவே நன்கு தெரிந்த மருத்துவர், திரையுலகினருக்கான அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு சென்றதும், அவரை நாற்காலியில் கட்டிவைத்து, மூவரும் சேர்ந்து மிரட்டித் தாக்கியுள்ளனர். மேலும் அவரிடமிருந்த ரூ.3.25 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் சாதனங்களையும் பறித்துக் கொண்டனர்” என்று காவல் துறை எஃப்.ஐ.ஆர்-ஐச் மேற்கோள் காட்டித் தெரிவித்துள்ளது.

 

 

இச்சம்பவம் குறித்து வெளியே கூறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அந்த கும்பல் மிரட்டியதால், பயந்துபோன மருத்துவர் 2 நாட்களுக்குப் பிறகே புகார் அளித்துள்ளார். கைது செய்யப்பட்ட மூவரும் நீதித்துறை காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேல் விசாரணைக்காக அவர்களைக் காவலில் எடுக்கக் காவல் துறை மனு தாக்கல் செய்யவுள்ளது.

 

 

அந்த மருத்துவர் தனது உறவினருடன் நெருக்கமாக இருந்தார் என்பதை அறிந்தே அதுல்யா இந்தச் சதித்திட்டத்தைத் தீட்டியதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிளாக்மெயில் செய்து அவரிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்துடனும், அவர்களின் உறவுக்கான டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரித்துமே அவர் இச்செயலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இந்த வழக்கு மற்றொரு திருப்பத்தை சந்தித்தது. அதுல்யாவின் உறவினரான 50 கடந்து பெண் ஒருவர் காவல் நிலையத்தை அணுகி, கடந்த மாதம் ஹோட்டல் அறையில் அந்த மருத்துவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் மருத்துவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

 

 

காவல் துறையினரின் கூற்றுப்படி, அதுல்யா ஒரு சட்டம் படித்த பட்டதாரி ஆவார். கேரள உயர்நீதிமன்றத்தின் முன்னணி குற்றவியல் வழக்கறிஞரிடம் அவர் பயிற்சி பெற்றுள்ளார். 2019-ல் ரமேஷ் பிஷாரடி இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ‘கானகந்தர்வன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.

 

 

2025-ல் வெளியான ‘டெய்ஸ் ஐரே’ (Dies Irae) படத்தில் டெஸ்ஸா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் பெரும் புகழ்பெற்றார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லாலும் நடித்திருந்தார். தென்னிந்தியத் திரையுலகில் பல புதிய பட வாய்ப்புகளைப் பெறவிருந்த சூழலில் அதுல்யா இந்த குற்றச் சம்பவத்தில் சிக்கியுள்ளார். மற்றொரு கைதான பிபின் பெரும்பள்ளி, பத்தாண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon