“பூமி உள்ளவரை புகழும் நிலைத்திருக்கும்!!” ஜெயலலிதாவின் 72-வது பிறந்த தினம்..! அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்!!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ள நிலையில், சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
தமிழ்த் திரை வானில் நட்சத்திரமாக ஜொலித்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்ததால் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.எம்.ஜி.ஆருக்கு இருந்த புகழ் இவருக்கும் வந்து சேர்ந்தது. எம்.ஜி.ஆரால் அம்மு என அன்பாக அழைக்கப்பட்ட ஜெயலலிதாவை அரசியலிலும் தடம் பதிக்க வைத்தார். இதனால் எம்.ஜி.ஆரின் வாரிசாகவே ஜெயலலிதாவை அதிமுகவினர் ஏற்று கொண்டாட ஆரம்பித்தனர்.

இதன் விளைவு, எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் அதிமுக இரு அணிகளாக பிளவுபட்ட போது வெளிப்பட்டது. எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி அம்மாள் தலைமையில் அதிமுக மூத்த தலைவர்கள் பலர் அணி வகுத்தாலும், அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவையே அங்கீகரித்தனர். இதனால் ஜெயலலிதாவிடமே கட்சியை ஒப்படைத்து விட்டு ஜானகி அம்மாள் ஒதுங்கினார்.
மீண்டும் ஒன்றுபட்ட அதிமுக உருவாகி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஒரே வருடத்தில் 1991-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல் முறையாக முதல்வரானார். கட்சியில் தனக்கு நிகர் தானே என்பது போல் இரும்புப் பெண்மணியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா. ராணுவ கட்டுக்கோப்புடன் அதிமுக என்னும் கட்சியை வழிநடத்தியவர் ஜெயலலிதா.

அரசியலில் அவர் சந்தித்த சோதனைகள் ஏராளம். தோல்விகளும் ஏராளம். 1996-ல் அதிமுக படுதோல்வி கண்டு, ஜெயலலிதாவும் கூட தோற்க நேர்ந்தது. அதன் பின் சொத்துக் குவிப்பு வழக்குகள் சுற்றிச் சுழன்றன. சிறைவாசமும் அனுபவிக்க நேர்ந்தது. ஆனாலும் துவண்டுவிடாமல், தனி ஒரு மனுஷியாக அனைத்து சவால்களையும் திறம்பட எதிர்கொண்டார். இதிலெல்லாம் மீண்டு, 2001-ல் மீண்டும் முதல்வரானார். ஆனால் அப்போது டான்சி வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட, முதல்வர் நாற்காலியில் முகமே தெரியாத ஓ.பன்னீர் செல்வத்தை அமர வைத்து அழகு பார்த்தவர்.
இப்படி, அதிமுகவில் சாமான்யனும் உச்சத்தில் அமர வைக்கப்படலாம் ; எம்மாம் பெரிய புகழ் பெற்ற தலைவர்களும் எந்நேரமும் குப்பைத் தொட்டியில் வீசி எறிவது போல் காணாமல் போகச் செய்யப்படுவார் என்ற நிலையை ஜெயலலிதா கட்சியில் உருவாக்கி வைத்திருந்தார். இதனால் கட்சியில் கலகம் விளைவிக்க முயன்ற பல பெருந்தலைகள் காணாமலே போன வரலாறும் உண்டு. கட்சியில் எல்லாமே அம்மாதான் ; மற்ற எல்லாருமே சும்மா தான் என்ற நிலை அவர் சாகும் வரை நீடித்தது எனலாம்.

சட்டப்பேரவைத் தேர்தலில் 1991, 2001,2011, 2016 என நான்கு முறை அதிமுகவுக்கு வெற்றி ஈட்டித் தந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் நாற்காலியை அலங்கரித்த ஜெயலலிதா, கொண்டு வந்த பல திட்டங்களும், சட்டங்களும் இன்றும் போற்றப்படுகின்றன. தான் எடுத்த முடிவில், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் பின் வாங்காமல், அஞ்சாத சிங்கமாக கர்ஜித்த ஜெயலலிதா, மறைந்தாலும், பூமி உள்ளவரை அவரின் புகழும் நிலைத்திருக்கும் என்பது போல் இன்றும் என்றும் நினைவில் கொள்ளப்பட்டு வருகிறார் என்பதை மறுப்பதற்கில்லை.
ஜெயலலிதா மறைந்து 3 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில், இன்று அவருடைய 72-வது பிறந்த நாள் விழாவை அதிமுகவினர் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இந்த ஆண்டு முதன் முறையாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த விழாக் கொண்டாட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை மரக்கன்றுகள் நட்டும், அன்னதானம் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் செய்தும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




