மம்தாவுடனான கனிமொழி சந்திப்பின் பின்னணி என்ன?
மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் – திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இந்த சூழலில், கடந்த சனிக்கிழமை மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவை அவரது இல்லத்தில் திமுக எம்.பி. கனிமொழி சந்தித்துப் பேசினார். தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மாநில கட்சிகளின் பிரச்சனைகள் குறித்து மட்டுமே இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக திமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலே ஆகியோரையும் கனிமொழி சந்தித்ததாகத் தகவல்கள் வெளியானது.இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள இல்லத்தில் மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியையும் கனிமொழி சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் – திமுக கூட்டணி முறிந்ததை அடுத்து, பிராந்திய கட்சிகளின் தலைவர்களை கனிமொழி சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, 2029ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு 3ஆவது அணியை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட நகர்வா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இது குறித்த கட்சிகளின் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




