வெல்லிங்டன் டெஸ்டில் நியூசி., அபார வெற்றி..! இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே போராடிய இந்தியா!!

வெல்லிங்டனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து . இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வே இந்தியாவுக்கு பெரும் போராட்டமாகி விட்டது.

 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தொடக்கத்தில் டி20 தொடரில் வெற்றி மேல் வெற்றி என வரிசையாக 5 போட்டிகளையும் வென்றது. இந்தத் தோல்வியால் துவண்டுவிடாத நியூசிலாந்து அணி, பின்னர் எழுச்சி பெற்றது போல இந்தியாவுக்கு தோல்வி மேல் தோல்வி என தோல்வியை பரிசாக திருப்பித் தந்து வருகிறது.ஒரு நாள் தொடரின் 3 போட்டிகளிலும் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து, 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் அபார வெற்றி பெற்று சாதித்துள்ளது.

 

வெல்லிங்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பதிலுக்கு நியூசிலாந்து 345 ரன்களை குவித்து 183 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் 2-வது இன்னிங்சில் 183 ரன்களை கடந்தால் மட்டுமே இன்னிங்ஸ் தோல்வியையாவது தவிர்க்க முடியும் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது.

 

ஆனால் முதல் இன்னிங்சில் சொதப்பியது போல, நேற்று 3-ம் நாள் ஆட்டத்தில் 2-வது இன்னிங்சிலும் முன்னணி வீரர்கள் பிரித்விஷா, கோஹ்லி, புஜாரா ஆகியோர் சொதப்பினர். மயங்க் அகர்வால் (58) மட்டும் ஓரளவு ரன் சேர்த்தார்.இதனால் நேற்றைய ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு144 ரன்கள் எடுத்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே 39 Jன்கள் இன்னும் தேவை என்ற நிலையில் இருந்தது.

 

இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியதுமே இந்திய அணியின் விஹாரி, ரஹானே அடுத்தடுத்து வீழ விக்கெட் வீழ்ச்சி தொடர்ந்தது. கடைசி கட்டத்தில் ரிஷப் பண்ட் 25 ரன்கள் எடுத்ததால் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து இந்தியாவின் மானத்தை மீட்டார். கடைசியில் 191 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டாக நியூசிலாந்து வெற்றிக்கு 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதனை 1.4 ஓவர்களில் எளிதாக விளாசி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

 

இந்தப் போட்டியில் அபாரமாக பந்து வீசி முதல் இன்னிங்சில் 4, 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் என மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தி நியூசிலாந்தின் வெற்றிக்கு வித்திட்ட சவுத்தீ ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வரும் 29-ந் தேதி நடைபெற உள்ள இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய வாவது முடியும் என்ற கட்டாயத்தில் இந்தியா உள்ளது.


Leave a Reply