--- --:--:-- --

உமர் காலித் ஆவணப்படம் ரத்து!

4

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் உமர் காலித் பற்றிய ஆவணப்படத்தின் திட்டமிடப்பட்ட திரையிடல், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலையீட்டைத் தொடர்ந்து ஐ.ஐ.ஐ. டி ஹைதராபாத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பிட்ட விலக்கு எதுவும் பெறப்படாவிட்டால், சான்றிதழ் பெறாத ஒரு படத்தை வெளிப்படையாக திரையிடுவது திரைப்பட சட்டத்தை மீறும் செயலாகும் என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இயக்குநர் லலித் வச்சானி இயக்கிய “கைதி எண். 626710 இஸ் பிரசண்ட்” (Prisoner No. 626710 is Present) என்ற அந்த ஆவணப்படம், வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு கே.ஆர்.பி (KRB) அரங்கில் மாணவர் குழு ஒன்றால் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது. மத்திய தணிக்கை வாரியத்தால் இன்னும் சான்றளிக்கப்படாத ஒரு ஆவணப்படத்தை பொதுவெளியில் திரையிடுவது, அச்சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட விலக்கு கோரப்படாவிட்டால், அது திரைப்பட சட்டத்தை மீறுவதாகும்” என்று தணிக்கை வாரியம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

 

 

மேலும், ஐ.ஐ.ஐ.டி ஹைதராபாத்தையும் அதில் டேக் செய்த நிறுவனத்தின் அதிகாரிகள் “தேவையான நடவடிக்கைக்காக இதைக் கவனத்தில் கொள்ளலாம்” என்றும் குறிப்பிட்டு உள்ளது. செய்தி நிறுவனமான பி.டி.ஐ வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியிட்ட அறிக்கையில், மாணவர்கள் அந்தத் திரையிடலை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

இந்தத் திரையிடலுக்கான அழைப்பிதழில், “அரசியல் கைதிகள் தினத்தை” முன்னிட்டு ஆவணப்படம் திரையிட திட்டமிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 1929- ஆம் ஆண்டு லாகூர் சிறையில் நீண்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்த பகத் சிங்கின் தோழரான ஜதிந்திர நாத் தாஸின் நினைவு தினத்தையும் குறிப்பிட்டிருந்தது.

 

பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழகத்தில் (NLSIU) இந்த ஆவணப்படத்தின் திட்டமிடப்பட்ட திரையிடல் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி எழுப்பிய எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. வளாகத்தை அரசியல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த அனுமதிப்பதற்கு இது சமம் என்று ஏ.பி.வி.பி குற்றம் சாட்டியிருந்தது.

 

“செயல்முறை மற்றும் பாதுகாப்பு காரணங்களை” சுட்டிக்காட்டி மாணவர் குழு திரையிடலை ஒத்திவைத்ததுடன், ஆவணப்படம் பின்னர் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டு உள்ளது. “கைதி எண். 626710 இஸ் பிரசண்ட்” என்பது ஜே.என்.யு (JNU) முன்னாள் ஆராய்ச்சி மாணவரான காலித்தை அடிப்படையாகக் கொண்டது. வடகிழக்கு டெல்லி கலவரத்தின் பின்னணியில் உள்ள பெரிய அளவிலான சதித்திட்டம் தொடர்பான வழக்கில் அவர் செப்டம்பர் 2020 இல் கைது செய்யப்பட்டார்.

 

 

இந்த வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) மற்றும் பிற விதிகளின் கீழ் காலித் மீது குற்றம் சாட்டப்பட்டதுடன், அவர் கைது செய்யப்பட்டது முதல் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon