குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்..! சபாநாயகரிடம் திமுக எம்எல்ஏக்கள் மனு!!
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இந்த சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என எதிர்ப்பு காட்டி வருகின்றன.
கேரளா, மே.வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டத்துக்கு எதிராக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக எதிர்க் கட்சியான திமுக தலைமையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அத்துடன் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஒரு வாரம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.2 கோடி கையெழுத்திட்ட படிவங்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.





