தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு நிலாச்சோறு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவை ஆவாரம்பாளையம் துரைசாமி லே அவுட் பகுதியை சேர்ந்த பெண்கள் தமிழ் பண்பாட்டு கலாச்சார மையம் எனும் அமைப்பை உருவாக்கி தமிழர் பாரம்பரிய பண்டிகைகளை பழமை மாறாமல் கொண்டாடி வருகின்றனர்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தைப்பூசத்துக்கு 7 நாட்கள் முன்பாகவே நிலவுக்கு மரியாதை செய்யும் வகையில் நிலாச்சோறு விழாவை அப்பகுதி பெண்கள் ஒன்று கூடி, கும்மியடித்து தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை பங்கிட்டு உண்டு மகிழ்ந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற மனமகிழ் கும்மி விழா என நடைபெற்ற நிலாச்சோறு நிறைவு திருவிழாவில் ஆவாரம்பாளையம் துரைசாமி லே அவுட் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றுகூடி நிலாச்சோறு திருவிழாவை நடத்தினர்.
மேலும்விடிய,விடிய கும்மியடித்து ஆடி,பாடி மகிழ்ந்தனர்.இதில் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில், இந்த திருவிழா பாரம்பரியமாக கிராமப்பகுதிகளில் கொண்டாடப்பட்டு வந்த நிலையில்,தற்போது நகர்ப்புறங்களில் இளைய தலைமுறை குழந்தைகள் நமது தமிழர் பாரம்பரிய விழாக்களை அறிந்து கொள்ளும் விதமாக இதனை இங்கு கொண்டாடுவதாக தெரிவித்தனர்.