தேனி மாவட்ட ஆவின் தலைவர் பதவிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவை நியமித்தது செல்லாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, கடந்தாண்டு மதுரை, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த பால் கூட்டுறவு சங்கத்தின் ( ஆவின்) தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் மதுரை மற்றும் தேனி மாவட்ட ஆவின் சங்கங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன.
இதனால், தேனி மாவட்ட ஆவின் தலைவர் பொறுப்புக்கு ஓ.ராஜாவும் 17 இயக்குநர்களும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தை எதிர்த்து அமாவாசை என்பவர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வந்தது.
இந்த வழக்கில், ஆவின் தலைவர் பதவியில் ஓ.ராஜா தொடர இடைக்கால தடை விதித்திருந்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. மேலும் இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பும் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்தது. அதில் விதிகளுக்கு புறம்பாக ஆவின் தலைவர் பதவியில் ஓ.ராஜாவை தற்காலிகமாக நியமித்தது செல்லாது.ஓ.ராஜா மற்றும் 17 இயக்குநர்களை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.