எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் திருப்பம்..! 2மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!!
நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக, எச்.ராஜா மீது தொடரப்பட்ட வழக்கில், 2 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஒன்றரை வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.
கடந்த 2018 -ம் ஆண்டு செப்டம்பரில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல மேடை அமைக்க பாஜகவினருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அப்போது இந்த விழாவில் பங்கேற்க சென்றிருந்த பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, போலீசாரிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தார். அதற்கு போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுவதாக கூற வே, நீதிமன்றத்தை அவதூறாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்து பேசியது பெரும் பரபரப்பானது.
அத்துடன் இந்தப் பேச்சு அடங்கிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைர லாகி பெரும் சர்ச்சையானது. எச் ராஜா மீது திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதனிடையே நீதிமன்றத்தை பகிரங்கமாக விமர்சித்த ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜரான எச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதையேற்ற நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.

ஆனால் எச்.ராஜா மீது திருமயம் போலீசார் பதிவு செய்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது. ஒன்றரை ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதை எதிர்த்து தந்தை பெரியார் திராவிடர் கழகத் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான துரைசாமி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார்.
எச். ராஜா போல் நீதிமன்றத்தை வேறு யாரும் பேசியிருந்தால் போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து இருப்பார்கள். எச். ராஜா மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் தேசிய செயலாளராக இருப்பதால் அவர் மீதான வழக்கை போலீசார் விசாரிக்கவே தயங்குகின்றனர் என மனுவில் துரைசாமி கூறியிருந்தார்,
இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எச்.ராஜா மீதான வழக்கில் விசாரணையை முடித்து, இரண்டு மாதத்தில் சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் திருமயம் காவல் ஆய்வாளர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். உயர் நீதிமன்ற உத்தரவால், ஒன்றரை ஆண்டுகள் கழித்து எச்.ராஜா மீதான வழக்கு மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




