மங்களூரு விமான நிலையத்தில் குண்டு வைத்தவன் சரண்..! அதிகாரிகளை பழிவாங்க குண்டு வைத்தானாம்!!

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் போலீசில் தானாகவே சரணடைந்தார். 2 வருடங்களுக்கு முன் தமக்கு விமான நிலையத்தில் வேலை கொடுக்க மறுத்த அதிகாரிகளை பழிவாங்கவே குண்டு வைத்ததாக அந்த நபர் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் வெடிகுண்டுகள் இருந்த பையை போலீசார் கைப்பற்றினர். இந்த பையை சோதித்த போது அதற்குள் 3 வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த வெடிகுண்டுகளை பத்திரமான இடத்தில் குழி தோண்டி வெடிக்க செய்தனர்.

 

இந்த வெடிகுண்டு பையை விமான நிலையத்தில் கொண்டு வந்து வைத்த நபர் யார்? என்பதை சிசிடிவி கேமரா பதிவு மூலம் போலீசார் ஆராய்ந்தனர். அதில் ஆட்டோவில் வந்த தொப்பி அணிந்த நபர் ஒருவர் விமான நிலைய டிக்கெட் கவுண்டர் அருகே வெடிகுண்டு பையை வைத்து விட்டு நைசாக நழுவிச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபரின் புகைப்படத்தை வெளியிட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். தனிப்படைகளும் அமைக்கப்பட்டு தேடி வந்தனர் –

இந்நிலையில் இன்று காலை மங்களூரு டிஜிபி அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்த மர்ம நபர் போலீசில் சரணடைந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் மணிப் பாலைச் சேர்ந்த அந்த நபர் பெயர் ஆதித்ய ராவ் (36) என்பது தெரிய வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, மங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ஆதித்யராவ் விண்ணப்பித்திருந்தாராம்.

 

ஆனால் அதிகாரிகள் அவரை தேர்வு செய்யாமல் நிராகரித்து விட்டனராம். இதனால் அதிகாரிகளை பழிவாங்கவே வெடிகுண்டு வைத்ததாகவும், தமது புகைப்படத்தை வெளியிட்டு போலீசார் தேடியதால், தாமாகவே சரணடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இருந்தாலும் போலீசார் ஆதித்யராவுக்கும் வேறு தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிரமாக தேடி வருகின்றனர்.


Leave a Reply