“பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை” – ரஜினியை மறைமுகமாக சாடிய ஓபிஎஸ்!!
பெரியார் பற்றி ரஜினி கூறிய கருத்துக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரியாரின்கருத்துக்கள்கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை என்றும், பெரியார் பற்றி முழுமையாக படித்து ஆராய்ந்த பின்பே கருத்து கூற வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். சாடியுள்ளார்.
பெரியார் குறித்து பேசிய ரஜினிக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பினாலும், தாம் பேசியதை நியாயப்படுத்தி மன்னிப்பு கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறி விட்டார். ரஜினியின் இந்த நிலைப்பாட்டுக்கு ஒரு தரப்பில் ஆதரவு, மற்றொரு தரப்பில் எதிர்ப்பு என எழுந்து ஒரே நாளில் பெரும் பரபரப்பாகி விட்டது.
ரஜினியின் கருத்துக்கு பாஜக தரப்பில் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவு கொடுக்கின்றனர். பெரியார் இயக்கத்தினரோ கொந்தளித்துக் கிடக்கின்றனர்.
தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ரஜினியின் கருத்துக்கு உரத்த குரலில் கண்டனம் தெரிவிக்காமல், மென்மையாகவும், மறைமுகமாகவும் சாடி வருகின்றன.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், நண்பர் ரஜினி அரசியல்வாதி கிடையாது; நடிகர் மட்டுமே என்று கூறி, பெரியார் பற்றி பேசும் முன் யோசித்து, சிந்தித்து பேச வேண்டும் என அட்வைஸ் கூறுவது போல் தமது எதிர்ப்பை பதிவு செய்தார்.
அதிமுக தரப்பிலோ அதையும் விட மென்மையான போக்கை கடைப்பிடிக்கின்றனர்.நேற்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், பெரியார் பற்றிய கருத்தை ரஜினி தர்த்திருக்கலாம். பத்த வைச்சிட்டியே பரட்டை என்பது போல இப்போது பற்றி எரிகிறது.
பெரியார் குறித்த சம்பவம் மறுக்க முடியாது; ஆனால் மறக்க வேண்டியது என்று கூறிவிட்டு மறக்கவேண்டியதை ஞாபகப்படுத்துவதா? என்ற அமைச்சர் ஜெயக்குமார், பழமையை பேசி நாம் பின்னால் போகக் கூடாது.
பழையவற்றை ஆராய்ந்தால் பிஎச்டி பட்டமா கிடைக்கப் போகிறது? என அவர் பாணியில் கிண்டலடிப்பது போல எதிர்ப்பை பதிவு செய்து விட்டு போனார்.
இதே போல, துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் ரஜனியை நேரடியாக குறிப்பிடாமல் பெரியாரை ஓகோவென புகழ்ந்து, ரஜினியை மறைமுகமாக சாடியுள்ளார்.
சென்னை புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் பங்கேற்ற ஓ.பன்னீர் செல்வத்திடம் பெரியார் பற்றி ரஜினி கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் உரிமைக்காக பெரியார் தமிழகத்தில் வலம் வந்ததன் காரணமாகத்தான், என்னைப் போன்ற சாதாரணமானவர்கள் கூட உன்னத நிலைக்கு வர முடிந்தது.
பெரியாருக்கு எதிராக எழுந்த விமர்சனங்கள் எல்லாம் பொய்யாகிப் போகின. பெரியாரின் கருத்துக்கள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
பெரியாரை குறை சொல்பவர்கள், இந்த சமுதாயத்தை உயர்த்த பெரியார் எடுத்த முன் முயற்சிகளை ஆரம்ப கட்டத்திலிருந்து தீவிரமாகப் படித்து ஆராய்ந்த பின்னரே கருத்து கூற வேண்டும் என ரஜினியின் பெயரை உச்சரிக்காமல், அவரை துணை முதல்வர் ஓபிஎஸ் மறைமுகமாக சாடியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




