டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 8-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தற்போது ஆளும் ஆம் ஆத்மிக்கும், மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இடையில் காங்கிரசும் மல்லுக்கட்டுவதால் பல தொகுதிகளில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இங்கு நாளையுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற உள்ளது. இதனால் இன்று வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பாக சிருந்தது.
இந்தத் தேர்தலில் தற்போதைய முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால், புதுடெல்லி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதற்காக இன்று காலை புதுடெல்லியில் உள்ள அனுமார் கோயிலில் இருந்து திறந்த ஜீப்பில் ஊர்வலமாக புறப்பட்டார்.
வழி நெடுகிலும் மக்கள் ஆரவாரம் செய்து கெஜ்ரிவாலுக்கு வரவேற்பளித்தனர். மக்கள் வெள்ளத்தில் நீந்திச் சென்ற கெஜ்ரிவால், வேட்பு மனுத்தாக்கல் செய்யும் தேர்தல் அதிகாரி அலுவலகம் சென்ற போது அறைக்கதவில் பெரிய பூட்டு மட்டுமே தொங்கியது. அப்போதுதான் வேட்பு மனுத்தாக்கலுக்கான நேரமான 3 மணியை கடந்து வந்துள்ளோம் என்பது தெரிய வந்தது.
இதனால் கெஜ்ரிவாலும் அவருடன் வந்தவர்களும் ஏமாற்றமடைந்தனர்.நல்ல வேளையாக நாளை வரை வேட்பு மனுத்தாக்கலுக்கு அவகாசம் உள்ளதால், நாளை ஊர்வலம் எதுவும் இல்லாமல் நேராக வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்வேன் எனக் கூறி விட்டு அந்த இடத்தில் இருந்து கெஜ்ரிவால் புறப்பட்டுச் சென்றார்.