நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் : தமிழகத்தில் பல இடங்களில் மறியல்..! சென்னையில் ஆயிரம் பேர் கைது!!

மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள பொது வேலைநிறுத்தத்தால் பல மாநிலங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

 

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு, மக்கள்விரோத நடவடிக்கைகளைக் முக்கிய 10 தொழிற்சங்கங்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் இன்று நாடு தழுவிய வேலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் பேருந்து , ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணிகள் முடங்கியுள்ளன. பொதுத் துறை வங்கிகளின் சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

 

மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது .அரசு பேருந்து போக்குவரத்தும் ஓரலிவு பாதிக்கப்பட்டது. கொல்கத்தாவில் கல்வீச்சு சம்பவத்தில் பாதிக்காமலிருக்க பேருந்து ஓட்டுனர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடி ஓட்டிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழகத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தமிழக எல்லையில் இருந்து கேரளா செல்லும் அரசு பேருந்துகள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் . கைது செய்யப்பட்டவர்களை வாகனங்களில் ஏற்றும் போது போலீசாருடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

 

மதுரையில் மார்க்சிஸ்ட் எம்பி வெங்கடேசன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். புதுச்சேரி மாநிலத்தில் இந்த வேலைநிறுத்தத்தால் பெரும்பாலான பேருந்துகள் ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் புதுச்சேரி தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் பேருந்துகள் இயங்கவில்லை.


Leave a Reply