தொழிற்சங்கங்கள் இன்று அறிவித்திருந்த நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக, தொழில் நகரங்களான திருப்பூர் கோவையில் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்கவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது.
.
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு மற்றும் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று ஒரு நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு முக்கிய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
இந்த பொது வேலை நிறுத்தத்தால் கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா, மகாராஷ்டிரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளில் பணிகள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது.
தமிழகத்தில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் பல இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் மட்டும் பேருந்து போக்குவரத்து பாதிக் கப்பட்டது.
இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருப்பூர் கோவை மாவட்டங்களில் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. 90 சதவீத கடைகளும் மூடப்ப்பட்டிருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பேருந்து போக்குவரத்தில் மட்டும் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.