ஜெயலலிதா துணிச்சலானவர்..! சட்டப்பேரவையில் புகழ்ந்த துரைமுருகன்!!

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விவகாரம் குறித்து காரசார விவாதம் நடந்தது. அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை துணிச்சலானவர் என புகழ்ந்து ஆளும் அதிமுகவினருக்கு குட்டு வைத்தார்.

 

தமிழக சட்டப்பேரவையில் கடந்த இரு நாட்களாக திமுக தரப்பில் வெளிநடப்பில் ஈடுபட்ட நிலையில், இன்று அவை நிகழ்ச்சிகள் சுமூகமாக நடைபெற்றது. நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது நீட் தேர்வை கொண்டு வந்து, கிராமப்புற மாணவர்களுக்கு அதிமுக அரசு துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வுக்கான விதை போட்டதே, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான் என்று பதிலளித்தார். நாங்கள் நீட் தேர்வை அமல்படுத்தி துரோகம் செய்தோம் என்றால், அதற்கான விதை போட்டது மத்தியில் திமுகவும் அங்கம் வகித்த கூட்டணி அரசுதானே காரணம் என்றார்.

 

இதனால் மு.க.ஸ்டாலினுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்தது. இடையில் பேசிய முன்னாள் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தைரியசாலி. அவர் முதல்வராக இருக்கும் வரை நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகே தமிழகத்தில் நீட் தேர்வு வந்தது என்று கூறி ஜெயலலிதாவை புகழ்ந்து அதிமுகவுக்கு குட்டு வைத்தார்.


Leave a Reply