டெல்லி ஜே.என்.யு.பல்கலை வன்முறை : மாணவர் சங்கத் தலைவர் அய்ஷ் கோஷுடன் கனிமொழி எம்.பி சந்திப்பு!!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆய்ஷ் கோஷை திமுக எம்பி கனிமொழி சந்தித்து உடல் நலம் விசாரித்ததுடன், பல்கலை வளாகத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

 

டெல்லியில் உள்ள பிரபலமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், கடந்த 5-ம் தேதி மாலை வன்முறை வெடித்தது.பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த வெறியாட்டத்தில் பல்கலை மாணவர் சங்க தலைவர் ஆய்ஷ் கோஷ் உட்பட மாணவர்களும் பேராசிரியர்களும் காயமடைந்தனர்.

 

இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் இந்த தாக்குதலை கண்டித்து பல்வேறு பகுதிகளில் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த வன்முறை தாக்குதலுக்கு இந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பு ஏற்பதாக அறிவித்துள்ளது. இதனால் அந்த அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

இதற்கிடையே பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவி அய்ஷ் கோஷ் உட்பட 20 பேர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வன்முறை சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் பல்கலைக்கழகத்தின் கணினி அறையில் நடந்த அசம்பாவித சம்பவம் தொடர்பாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி, இன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவி அய்ஷ் கோஷை இன்று நேரில் சந்தித்தார். தலையில் பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற்று வரும் அவரிடம் விசாரணை நடத்தியதுடன்,முகமூடி அணிந்த மர்ம நபர்கள், மாணவர்கள் மீது நடத்திய வன்முறை தாக்குதல் குறித்தும் கனிமொழி கேட்டறிந்தார்.


Leave a Reply