ஜெயலட்சுமிக்கு பதிலாக விஜயலட்சுமிக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய விவகாரம்..!! தேர்தல் அதிகாரி அதிரடியாக சஸ்பென்ட்!!

கடலூர் மாவட்டம் குமளங்குளம் ஊராட்சியில், வெற்றி பெற்ற ஜெயலட்சுமி என்பவருக்கு பதிலாக தோல்வியடைந்த விஜயலட்சுமி என்ற பெண்ணுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில், வாக்கு எண்ணிக்கை முடிவை குளறுபடியாக அறிவித்த தேர்தல் அதிகாரி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், கடலூர் மாவட்டம் குமௗங்குளம் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு ஜெயலட்சுமி என்ற பெண் ஆட்டோ சின்னத்திலும், விஜயலட்சுமி என்ற பெண் பூட்டு சாவி சின்னத்திலும் போட்டியிட்டனர்.

 

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலட்சுமி 1,350 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அதிகாரிகளோ விஜயலட்சுமி வற்றி விட்டதாகக் கூறி அவருக்கு வெற்றிச் சான்றிதழும் வழங்கி விட்டனர்.இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

 

உண்மையில் வெற்றி பெற்ற ஜெயலட்சுமி யோ, இதை எதிர்த்து மன்றாடிப் பார்த்தும், வெற்றிச்சான்றிதழ் வழங்கிய நிலையில் அதனை மாற்ற முடியாது என தேர்தல் அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செழியனும் கைவிரித்துவிட்டனர்.
இதை எதிர்த்து ஜெயலட்சுமி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து மட்டுமே தீர்வு காண முடியும் எனவும் கூறி விட்டனர்.

 

அதிகாரிகளின் இந்தக் குளறுபடியால் குமளங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். வீடுகளில் கருப்புக்கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் வெற்றி பெற்றதாக சான்றிதழ் பெற்ற விஜயலட்சுமியை ஊராட்சித் தலைவராக ஏற்க மாட்டோம்.

பதவியேற்கவும் விட மாட்டோம் என கிராம மக்கள் உறுதியாக இருந்தனர். இதனால் கடந்த திங்கட்கிழமை பதவி ஏற்க வந்த விஜயலட்சுமியை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு முற்றுகையிட்டனர். அவரை பதவி ஏற்க அனுமதிக்க மறுத்து பல மணி நேரம் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் பதவியேற்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

 

இது தொடர்பாக நமது குற்றம் குற்றமே இதழில் விரிவாக செய்தியும் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செழியன், வாக்கு எண்ணிக்கை அதிகாரியாக இருந்த கடலூர் மேற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

வாக்கு எண்ணிக்கை முடிவு குறித்து உதவி தேர்தல் அதிகாரி கவிதா முறையாக தெரிவித்தும் , அதில் குளறுபடி செய்தது தேர்தல் அதிகாரி சுப்பிரமணிதான் என்பது மாவட்ட ஆட்சியர் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.


Leave a Reply