நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம் : தமிழகத்தில் பாதிப்பு உண்டா..? வங்கிப் பணிகள் முடங்கலாம்!!

மத்திய அரசுக்கு எதிராக முக்கிய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால், தமிழகத்தில் வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளன.

 

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, முக்கிய தொழிற்சங்கங்களான ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐடியுசி, சிஐடியு , தொமுச உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள், நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதும் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு, தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் ஆளும் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் தமிழகத்தில் இந்த வேலை நிறுத்தத்தால் பெரும் பாதிப்பு இருக்காது என்றே தெரிகிறது. ஆனாலும் வங்கி ஊழியர்களின் பெரும்பாலான சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதால் வங்கிப் பணிகள் முடங்கலாம் என்று கூறப்படுகிறது.

 

அரசுப் பேருந்து போக்குவரத்தும் ஓரளவு பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை என்ற ரீதியில் கடும் கெடுபிடிகள் விதித்துள்ளது தமிழக அரசு . இதனால் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

 

இந்நிலையில், நாளை மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.புதுச்சேரி மாநிலத்தில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பெரும்பாலான தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவளித்துள்ளதால் அங்கு இந்தப் போராட்டம் முழு அளவில் வெற்றி பெறும் என்று தெரிகிறது.


Leave a Reply