கோவை கண்ணப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சபிதா. இருவரும் சாய்பாபா காலனி அருகேயுள்ள ரூட்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்கில் சூபர்வைசராக பணியாற்றிய சுபாஷ் என்பவர் பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமராவை வைத்து உடைமாற்றுவதை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அறிந்த சபிதா அதே பெட்ரோல் பங்கில் பணிபுரியும் தனது கணவர் மணிகண்டனிடம் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இது குறித்து நிர்வாகத்திடம் புகார் தெரிவித்த நிலையில் சுபாஷினை ரூட்ஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்தது . மேலும், காவல்நிலையத்தில் வைத்து சுபாஷை மிரட்டிய பின்னர் அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்பப்படவில்லை. இந்நிலையில் பெட்ரோல் திருடியதாக மணிகண்டனை அந்நிறுவன அதிகாரிகள் தாக்கியதாக கூறி, கோவை அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கோவை கண்ணப்ப நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ரூட்ஸ் நிறுவனத்திற்க்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் பெண்கள் உடை மாற்றும் அறையில் செல்போன் கேமராக்களில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோக்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா கூறுகையில் பெட்ரோல் பங்க் ஊழியர் பணியாற்றும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை எனவும், ரூட்ஸ் பெட்ரோல் பங்க்கில் வீடியோ எடுத்தது தொடர்பாக காவல் துறையினருக்கு புகார் சென்றும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என மாதர் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும்,கோவையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த காவல் துறையினர் செயல்பாடு திருப்திகரமாக இல்லை எனவும்,அதேபோல சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதன் உரிமையாளர் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.காவல் நிலையத்தில் புகாரளித்தாலே நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் காவலன் ஆப் மூலம் எப்படி நடவடிக்கைகள் எடுப்பார்கள் எனவும் கேள்வி எழுப்பினர். பெண்கள் உடைமாற்றும் வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் சாய்பாபாகாலனி போலீசார் இது குறித்து மீண்டும் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.