உத்ரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழா இரவு முதல் விடிய, விடிய நாட்டியாஞ்சலி

இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் உத்ரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் ஆருத்ர தரிசன விழாவையொட்டி, மூலவர் பச்சைக் கல் மரகத நடராஜருக்கு ஜன 9 காலை 8 மணிக்கு சந்தனம் படி களையப்பட்டு 9 மணியளவில் மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

 

இதனை தொடர்ந்து தேவார இன்னிசை, மண்ணிசை, திருமுறை பாராயணம் நடைபெறுகிறது. இதன் தொடர் நிகழ்வாக ஜன 9 மாலை 6 மணி முதல் ஜன.10 காலை 6 மணி வரை நாட்டியாஞ்சலி 2020 நடைபெறவுள்ளது. இது குறித்து ஆதி சிதம்பரம் ஆருத்ரா அபிநய நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் மாலதி செந்தில் குமார், செயலாளர் வித்யா பிரியதர்ஷினி ஆகியோர் கூறுகையில், உத்ரகோசமங்கையில் ஆதி சிதம்பரம் பச்சை மரகதக் கல் நடராஜர் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, 160 நடன, நாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி முதல் முறையாக நடத்தப்படுகிறது.

 

இதில் புதுச்சேரி, பெங்களூரு, தஞ்சை, சென்னை, பண்ருட்டி, திருவண்ணாமலை, ஆம்பூர், தூத்துக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம் நகரங்களில் இருந்து 24 குழுக்களைச் சேர்ந்த கலைஞர்களின் தனிநபர், இருவர் மற்றும் குழு பரத நாட்டிய நிகழ்ச்சி விடிய, விடிய நடத்தப்படுகிறது.

அடுத்தாண்டு நடைபெறும் ஆருத்ர தரிசன நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இராமநாதபுரத்தில் கடந்த 8 ஆண்டுகளில் எங்களது நாட்டியாஞ்சலி அகாடமி மூலம் 500 கலைஞர்களை உருவாக்கி உள்ளோம்.

 

7 அரங்கேற்றம் நடத்தி உள்ளோம். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியார், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தக்கார் குமரன் சேதுபதி, திவான் பழனிவேல்பாண்டியன், சரக பொறுப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் என்றனர்.


Leave a Reply