ஊராட்சி தலைவர் தேர்தலில் ஜெயலட்சுமி என்பவர் வெற்றி பெற, தோல்வியடைந்த விஜயலட்சுமி என்பவருக்கு தவறாக அதிகாரிகள் வெற்றி சான்றிதழை வழங்கி குளறுபடி செய்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இன்று விஜயலட்சுமியை பதவியேற்கவிடாமல் ஊர் மக்கள் திரண்டு முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், அதிகாரிகள் செய்த குளறுபடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் இருந்தே, மாநில தேர்தல் ஆணையம் செய்த பெரும் குழப்பங்கள் ஒரு பக்கம் என்றால், தேர்தலின் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும் அதிகாரிகள் அரங்கேற்றிய கூத்துக்களால் தேர்தல் என்பதே கேலிக்கூத்தாகி விட்டது எனலாம்.
பல இடங்களில் ஆளும் தரப்புக்கு சாதகமாக தெரிந்தே மோசடி செய்ததாகவும் புகார்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை தோல்வியடைந்ததாக அறிவித்து பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளனர். இப்படித்தான் கடலூர் மாவட்டத்தில் குமளங்குளம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஜெயலட்சுமி, விஜயலட்சுமி என ஒரே மாதிரி பெயர் கொண்ட 2 பெண்கள் போட்டியிட்டனர். இருவர் பெயரிலும் முதல் எழுத்தில் மட்டுமே வித்தியாசம்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலட்சுமிக்கு கிடைத்தது 2860 ஓட்டுகள். பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட விஜய லட்சுமி வாங்கிய ஓட்டு1179. விஜயலட்சுமியை விட 1681 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயலட்சுமி ஜெயித்ததாகத்தானே அறிவிக்க வேண்டும். ஆனால் அதிகாரிகளோ பெயர் குழப்பத்தில், தோல்வியடைந்த விஜயலட்சுமிக்கு வெற்றிச் சான்றிதழை வழங்கி விட்டனர்.
இதையறிந்த ஜெயலட்சுமி, அதிர்ச்சியில் உறைந்து விட்டார். ஐயோ ஜெயித்தது நான் தானே? மாற்றி அறிவிக்கிறீர்களே என்று புலம்பினார்.. கண்ணீர் சிந்தி கெஞ்சினார்.. ஆனால், அதிகாரிகளோ தாம் செய்தது தவறு என்று தெரிந்தும் மசியவில்லை. வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டால் மாற்ற முடியாது என ஒரேயடியாக கைவிரிக்க, அங்கேயே தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினாலும் ஜெயலட்சுமிக்கு ஒரு தீர்வும் கிடைத்த பாடில்லை.
அடுத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் சென்று முறையிட்டார் ஜெயலட்சுமி. அங்கேயே கணவர், உறவினர்கள், ஆதரவாளர்களுடன் தர்ணாவும் செய்தார். ஆனால், தவறு நடந்துள்ளதை ஆட்சியர் ஒத்துக் கொண்டாரே தவிர,தேர்தல் அதிகாரி கொடுத்த தீர்ப்பை திருத்துவதற்கு தமக்கும் அதிகாரமே இல்லை. கோர்ட்டுக்குத் தான் செல்ல வேண்டும் என்று கைகாட்டி விட்டார். இதனால் வழக்குத் தொடர ஜெயலட்சுமி தயாராகி வருகிறார்.
இப்படி அதிகாரிகள் அநியாயம் செய்து விட்டு கை விரித்தால் நாங்கள் சும்மா விடுவோமா? என்று வாக்களித்து உண்மையான தீர்ப்பெழுதிய குமளங்குளம் கிராம மக்கள் 2 நாட்களாக கொந்தளித்து கிடந்தனர். நாங்கள் அனுமதித்தால் தானே தோல்வியடைந்த விஜயலட்சுமியால் தலைவராக இருக்க முடியும். உண்மையான மக்கள் சக்தி என்னவென்று மீண்டும் ஒருமுறை நிரூபிப்போம் என சவால் விட்டு, இன்றைய பதவியேற்பு நாளுக்காக காத்திருந்தனர்.
பதவியேற்பு தினமான இன்று காலை விடிந்தவுடனே ஒட்டு மொத்த ஊர் மக்களும் ஊராட்சி அலுவலகம் முன் திருவிழா கூட்டம் போல் திரண்டு முற்றுகையிட்டனர். அப்போது தோல்வியடைந்த விஜயலட்சுமியும் தைரியமாக வர, ஊர் மக்கள் பதவியேற்கக் கூடாது . திரும்பிப் போ என கூச்சலிட ஒரே ரகளையாகி விட்டது. பல மணி நேரமாக மக்கள் முற்றுகையைத் தொடர, அதிகாரிகளும் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனால் பதவியேற்பு விழா நடைபெறவில்லை.
மக்கள் சக்தி ஒன்று திரண்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் தான் குமளங்குளம் கிராமத்தில் இன்று நடந்த போராட்டம்.
இனியாவது வெற்றி பெற்ற ஜெயலட்சுமிக்கு நீதி கிடைக்குமா? தீர்ப்பு திருத்தி வாசிக்கப்படுமா? என்பதற்கு விரைவிலேயே விடை கிடைக்குமா? என்பது இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக ஓரிரு நாளில் தெரிந்துவிடும் என எதிர் பார்க்கலாம்.