இந்தியாவிலேயே தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ்வதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருவதற்கு பாராட்டும் தெரிவிப்பதாகவும் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்திய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டினார்.
தமிழக சட்டசபையின் 2020-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கியது. அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்கள் எனக் கூறி உரையை தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் .அவரது உரையின் பெரும்பாலான பகுதி, தமிழக அரசுக்கும், முதல்வர் பழனிசாமிக்கும் பாராட்டு மழையாகவே இருந்தது. மேலும் மத்திய அரசு தொடர்பான விஷயங்களில் வழக்கம் போல வலியுறுத்தப்படும், கோரிக்கை வைக்கப்படும் என்ற ரீதியில் அமைந்தது.
ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்:
தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது. இதற்காக முதல்வர் பழனிசாமியை பாராட்டுகிறேன்.
நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகம் முதலிடம் பெற்றதற்காக முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டுக்கள்.
புதியமாவட்டங்கள் பிரிவினையால் அரசு நிர்வாகம் மக்களிடம் நெருங்குகிறது
கடந்தாண்டு ஆளுநர் உரையில் வெளியான 105 அறிவிப்புகளில் 73 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு பாராட்டுக்கள். மீதமுள்ள அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
மத்திய அரசிடம் இருந்து ரூ.17 ஆயிரத்து 957 கோடி மானியம் பெறப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய நிலுவைத் தொகைகளை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.
தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தி 115 இலட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. பொதுவிநியோகத் திட்டத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
நடப்பாண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 2500 கோடி கடன் வழங்க இலக்கு. 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது முழுமையாக பாதுகாக்கப்படும். வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.
மாமல்லபுரம் மேம்பாட்டிற்கு ரூ.563 கோடியில் திட்டம் தயார்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
நடப்பாண்டில் ரூ.4652 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட 453 அறிவிப்புகளில் 114 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய அறிவிப்புகளை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
சமூக நீதியை பாதுகாக்க தமிழக அரசு உறுதி கொண்டுள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்தது.