கவுன்சிலர்களை ‘தூக்க’ ஆரம்பிச்சுட்டாங்கோ..! திமுக கவுன்சிலரை போலீஸ் ஆசியோடு ‘லபக்’ செய்த அதிமுக..! ‘சாப’மிட்ட திமுகவினர்!!

உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு முடிந்த கையோடு, மறைமுகத் தேர்தலுக்கான மல்லுக்கட்டு தொடங்கி விட்டது. சுயேட்சைகள், மாற்றுக் கட்சி கவுன்சிலர்களை வளைக்க அதிமுகவும், திமுகவும் பல தந்திரங்களை கையாள, தமிழகத்தின் பல இடங்களில் இன்று ஒரே நாளில் ஏகப்பட்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

 

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவர்கள் , ஊராட்சி உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் இன்று பதவியேற்று விட்டனர். இதில், ஊராட்சித் தலைவர்கள் மட்டுமே நிம்மதியாக இன்று முதல் தங்கள் பணியை தொடரலாம் என்ற நிலைமை. மற்ற கவுன்சிலர்களுக்கு வரும் 11-ந் தேதி வரை நிம்மதியில்லாத சூழல் உருவாகியுள்ளது.

 

இதற்கு காரணம் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளதும் அதில், தற்போது வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் ஓட்டுப் போட வேண்டும் என்பதும் தான்.

 

இதனால் கவுன்சிலர்களின் மதிப்பு, மவுசு ஜாஸ்தியாகி விட்டது.இந்த தலைவர், துணைப் பதவிகளை குறிவைத்துள்ளவர்கள், கவுன்சிலர்களின் ஆதரவைப் பெற அவர்களை குறிவைத்து சுற்றி வளைக்கத் தொடங்கி விட்டனர்.

 

இதில் மாவட்ட, ஒன்றியங்களை கூடுதலாக கைப்பற்ற அதிமுகவும் திமுகவும் மல்லுக்கட்ட தொடங்கி விட்டன. பெரும்பான்மை உள்ள இடங்களில் சொந்தக் கட்சிக்குள்ளேயே கவுன்சிலர்களிடம் பேரம் நடத்தி வலை வீசுகின்றனர்.

இது உட்கட்சி பிரச்னை என்பதால் அந்தந்தக் கட்சி நிர்வாகிகள் சமாளித்து விடுவார்கள் என்பதுடன் திமுகவும் அதிமுகவும் தங்கள் கட்சிகளின் கவுன்சிலர்களை பத்திரமான இடங்களுக்கு பேக்கப் செய்யவும் தொடங்கி விட்டனர்.

 

ஆனால் பெரும்பான்மை இல்லாத இடங்களில் தான், சுயேட்சைகள், பிற கட்சி கவுன்சிலர்களை குறிவைத்து அதிமுகவும், திமுகவும் நைசாக தூக்க ஆரம்பித்துள்ளனர். அது மட்டுமின்றி அதிமுகவினரை திமுகவினர் கடத்த, திமுகவினரை அதிமுகவினர் லபக் செய்வது என பல இடங்களில் களேபரம் களைகட்டத் தொடங்கி விட்டது. இதிலும் கவுன்சிலர்களுக்கு சாதகமாக சட்டம் உள்ளதும் ரொம்பவே வசதியாகிவிட்டது.

 

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறினால் கட்சித் தாவல் சட்டம் பாய்ந்து பதவி பறிபோய்விடும். ஆனால், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கட்சி மாறினால் இந்தச் சட்டம் பொருந்தாது என்பதால், சுயலாபத்துக்காக சகஜமாக கட்சித் தாவ தயாராகி விட்டனர் என்றும் கூறலாம்.

 

இதனால் இன்று பதவியேற்க வந்த கவுன்சிலர்கள் பலர் என்ன நடக்குமோ? என்ற அச்சம், பீதியுடன் பாதுகாப்பாக வந்தாலும் இரு கட்சியினரும் விடுவதாக இல்லை. பல இடங்களில் கவுன்சிலர்கள் பலரை அலாக்காக தூக்கிச் சென்ற, செல்ல முயன்ற சம்பவங்கள் அரங்கேறி விட்டன. சில இடங்களில் அடிதடி வரை சென்று போலீஸ் தடியடி சம்பவங்களும் நடைபெற்று பகீர் கிளம்பியுள்ளது.

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியத்தில் மொத்தம் 13 வார்டுகள். இதில் திமுகவும், அதிமுகவும் தலா 5 இடங்களில் வெற்றி பெற, அமமுக 2 இடங்களிலும் சுயேட்சை ஒருவரும் வெற்றி பெற்றிருந்தனர்.

 

இதனால் அமமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களை தங்கள் வசப்படுத்த திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டன. பதவியேற்க வந்த அம முகவின் கவுன்சிலர்களான மலேசியா பாண்டி அலெக்ஸ் பாண்டி ஆகிய இருவரையும் அலேக்காக தூக்கிச் செல்ல இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் ஒன்றிய அலுவலகம் முன் திரண்டனர்.

 

இருவரையும் இரு கட்சியினரும் சுற்றி வளைக்க இரு தரப்புக்கும் அடிதடியாகி விட்டது போலீசும் தடியடி நடத்த, இந்த களேபாரத்தில் 2 கவுன்சிலர்களும் மாயமாகி விட்டனர். யார் கடத்திச் சென்றது என்பது தெரியவில்லை.

 

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள செல்லம்பட்டி ஒன்றியத்தில் நடந்தது மற்றொரு கூத்து. இந்த ஒன்றியத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற 24 வயது பொறியியல் பட்டதாரி இளைஞரான அரவிந்த் என்பவரை லபக் செய்ய முயற்சி நடந்தது. இதைக் கண்ட அரவிந்த், பதவியேற்றவுடன் பின்பக்க சுவர் ஏறி தப்பி ஓடினாலும், அவரும் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதை விட உச்சகட்ட பரபரப்பு சம்பவம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் அரங்கேறியுள்ளது. இந்த ஒன்றிய தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 20 வார்டுகள் உள்ள இந்த ஒன்றியத்தில் 3 வார்டுகள் இந்தப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிவில் அதிமுக 10 இடங்களில் வென்று பெரும்பான்மையை பெற்றாலும், பட்டியலின பெண்கள் வார்டில் யாரும் ஜெயிக்க வில்லை. அந்த 3 இடங்களிலும் திமுக வெற்றி பெற்றுவிட்டது. இதனால் தலைவர் பதவிக்கு பட்டியலின பெண் உறுப்பினர் இல்லாத நிலையில், அதிமுகவுக்கு திண்டாட்டமாகி விட்டது.

 

இதனால், திமுகவைச் சேர்ந்த ஒரு பெண் உறுப்பினரை அணிமாறச் செய்ய குறிவைத்தனர். இதில் 7-வது திமுக பெண் கவுன்சிலர் அதிமுகவினரின் வலையில் சிக்கி விட்டார் போலும். திமுகவினரின் பலத்த பாதுகாப்புடன் வந்து இன்று பதவியேற்ற அடுத்த நிமிடமே சந்திரமதி, அதிமுகவினர் பக்கம் ஒதுங்க, போலீஸ் பாதுகாப்புடன் அவரை காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

 

இதைக் கண்ட திமுகவினருக்கோ பெரும் அதிர்ச்சி. கடைசியில் சந்திரமதி mய அதிமுகவினர் அழைத்துச் சென்ற கார், பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் வாகனம் மீது சரமாரியாக மண் வாரித் தூற்றி திமுகவினர் சாபமிட்டது பரபரப்பாகி விட்டது.

.


Leave a Reply