ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், ஊராட்சி ஒன்றிய வார்டுகள் வாரியாக, ஒவ்வொரு சுற்றாக ஓட்டுகள் எண்ணப்படுவதால், இரவு வரை ஓட்டு எண்ணும் பணி நீடிக்கும் என்று தெரிகிறது.
தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு, கடந்த 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் 91 ஆயிரத்து 375 பதவிகளுக்கு நடந்த தேர்தலில், முதல் கட்டத்தில் 76.19 சதவீதமும், 2-ம் கட்டத்தில் 77.73 சதவீதமும் வாக்குகள் பதிவானது.
வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் 315 மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.இந்த உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஒன்றியத்தில் மட்டும் சோதனை முயற்சியாக ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் இங்கு மட்டும் ஓரிரு மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் முதலில் வெளியாகிறது.
.
மற்ற 314 ஒன்றியங்களில் வாக்குச் சீட்டு முறையில் ஒவ்வொருவரும் 4 வாக்குகள் பதிவிட்டு ஒரே பெட்டியில் போட்டதால், அவற்றை தனித்தனியாக பிரித்த பின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றுக்கும் ஒன்றிய கவுன்சிலர் வார்டு வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றனர் பின்னர், ஓட்டுப் பெட்டிகள் திறக்கப்பட்டு பதிவான 4 வண்ணங்களில் உள்ள ஓட்டுச் சீட்டுகள் பிரிக்கப்படுகின்றன. பின்னர் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான ஓட்டுச்சீட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் முதலில் அறிவிக்கப் படுகின்றன. அதன்பின் பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல் முடிவும், தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை முடிவும் அறிவிக்கப்படுகிறது.
மாவட்ட கவுன்சில் பதவிக்கான ஓட்டுக்கள் மட்டும், ஒவ்வொரு சுற்று முடிவிலும் தனியாக கணக்கிடப் பட்டு, இறுதிச் சுற்று முடிந்தவுடன் முடிவு அறிவிக்கப்படும். இதனால் இறுதி முடிவுகள் வெளியாக இன்று இரவாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.