“மீண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டி வரும்” – உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்புக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!!

உச்ச நீதிமன்ற தீர்ப்புப் படி வார்டு மறு வரையறை, இடஒதுக்கீடு செய்யாமலும், அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்காமலும் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

உச்ச நீதி மன்ற உத்தரவையடுத்து தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று மாலை வெளியிட்டார். அதன்படி ஏற்கனவே அறிவித்தபடி, டிசம்பர் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும், நாளை மறு நாள் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முறையாக பின்பற்றாமல் புதிய தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வார்டு மறு வரையறை, இடஒதுக்கீடு செய்து முடித்த பின்னரே தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாமல் புதிய தேர்தல் தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். புதிய தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பு அனைத்துக் கட்சிகளை கூட்டி ஆலோசனையும் நடத்தவில்லை.

 

தமிழக முதல்வர், அமைச்சர் ஆகியோரின் பேச்சைக் கேட்டு அதிமுக கிளைச் செயலாளர் போல், கைப்பிள்ளையாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தன்னிச்சையாக செயல்படுகிறார். இதன் மூலம் சுதந்திரமான, நேர்மையான தேர்தல் என்ற உயர்ந்த நோக்கத்தையே கேலிக்கூத் தாக்கியுள்ளனர். எனவே முறையாக தேர்தலை நடத்த வலியுறுத்தி மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்புக்கும், மாநிலத் தேர்தல் ஆணையத்தை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளதுடன், மீண்டும் நீதிமன்றத்தை நாடப் போவதாக அறிவித்துள்ளதால், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்ற சந்தேகம் இன்னும் நீடிக்கவே செய்கிறது.


Leave a Reply