ஏற்கனவே அறிவித்தபடி, ஊரக உள்ளாட்சிகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.புதிய அறிவிப்பாணைப்படி, நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக, மாவட்டங்கள் பிரிவினை செய்யப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய தேர்தல் அறிவிப்பாணையையும் அட்டவணையும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று மாலை வெளியிட்டுள்ளார்.
அதன்படிஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியலில், வேட்பு மனுத்தாக்கல், மனு பரிசீலனை, மனு வாபஸ் ஆகியவற்றுக் கான தேதிகளில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் அட்டவணை விபரம்:
வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் : 09.12.19
வேட்பு மனு செய்ய கடைசி நாள் : 16.12.19
வேட்புமனு பரிசீலனை : 17.12.19
வேட்புமனு வாபஸ் :19.12.19
முதற்கட்ட தேர்தல் : 27.12.19
2-ம் கட்ட தேர்தல் : 30.12.19
வாக்கு எண்ணிக்கை : 02.01.2020
மறைமுக தேர்தல் :11.01.2020
தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களிலும் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என தெரிவித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தடையில்லை என்றும் அறிவித்துள்ளார். இதனால் தேர்தலுக்கு முன்னரே ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய பரிசுத் தொகுப்பு, ரேசன் கார்டு அனைவருக்கும் வழங்கப்படும் என்று தெரிகிறது.