தமிழகத்தையே உலுக்கிய மேலவளவு பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட 7 பேர் படுகொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதிகள் 13 பேரை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்தது எப்படி? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதால், தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1996-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள மேலவளவு பஞ்சாயத்து தலைவர் பதவி, இட ஒதுக்கீட்டு அடிப்படையில் தலித் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு கடும் தெரிவித்த ஒரு பிரிவினர், தேர்தலில் யாரும் போட்டியிடக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தனர். இதனால் 2 முறை தள்ளி வைக்கப்பட்ட தேர்தல், 3-வது முறையாக நடந்த போது முருகேசன் என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
கட்டுப்பாட்டை மீறி தேர்தலில் நின்று வெற்றி பெற்றதால் முருகேசன் மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வந்தது. இதனால் பாதுகாப்பு கேட்டு, கடந்த 1997 ஜூன் 30-ந் தேதி மதுரை ஆட்சியரை சந்தித்தார் முருகேசன். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் பேருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் வழியில் பேருந்தை வழிமறித்த ஒரு கும்பல், முருகேசன் உள்பட 7 பேரை வெட்டி படுகொலை செய்தது.முருகேசனின் தலையை துண்டித்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள கிணற்றில் வீசி விட்டுச் சென்றது அக் கும்பல் .
தமிழகத்தையே உலுக்கிய இந்தக் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தண்டனைக் காலம் முடிவடையும் முன்னரே 13 பேரும் கடந்த 9-ந் தேதி விடுதலை செய்யப்பட்டனர். எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு இவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்ததால் விடுதலை செய்யப்பட்டனர்.
சாதிய அடிப்படையில் நடைபெற்ற கொடூரக் கொலையில், தண்டனை பெற்ற கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக, ரத்தினம் என்பவர் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் தலைமையிலான அமர்வு, 13 பேரை முன்கூட்டியே விடுதலை செய்தது தொடர்பாக, தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பியது. சாதிய வன்மத்தை வைத்து நடத்தப்பட்ட கொலையில், குற்றவாளிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்தது எப்படி? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.மேலும் ரத்தினத்தின் மனுவை வழக்காக தாக்கல் செய்ய அனுமதியளித்த நீதிபதிகள், முன்கூட்டி விடுதலை செய்யப்படட குற்றவாளிகள் 13 பேரையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
பொதுவாக சாதாரண கொலை, எதிர்பாராத கொலை, சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலை செய்து தண்டனை பெற்று வரும் குற்றவாளிகள் தான், அரசின் உத்தரவின் பேரில் நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டி விடுதலை செய்யப்படுவது வழக்கம். ஆனால் சாதிய அடிப்படையில் நடத்தப்பட்ட, தமிழகத்தையே உலுக்கிய, மேலவளவு கொலை வழக்கு கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்த விவகாரம் தமிழக அரசுக்கு பெரும் சிக்கலையே ஏற்படுத்தியுள்ளது எனலாம்.