காயத்துடன் போராடிய நல்ல பாம்பு : மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை

மதுரை அருகே காயத்துடன் போராடிய நல்ல பாம்புக்கு மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின் மீண்டும் காட்டுப்பகுதியில் விடப்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே முனியாண்டி புரம் குடியிருப்பு பகுதியில் நல்ல பாம்பு ஒன்று நகர்ந்து செல்ல முடியாமல் கிடந்ததுள்ளது. அதன் உடலில் காயங்கள் இருந்ததால் அது உயிருக்கு போராடியது.

 

இதை கண்ட அப்பகுதி மக்கள் திருநகர் ஊர்வனம் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அதன் பொறுப்பாளர்கள் அங்கு வந்து அந்த பாம்பை மீட்டு மதுரை தல்லாகுளத்தில் உள்ள பன்னோக்கு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு கால்நடை மருத்துவக் குழுவினர் அந்த பாம்பை பரிசோதித்தபோது அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. இதையடுத்து அந்த பாம்புக்கு சுமார் இரண்டு மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

 

சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறிய அந்த பாம்பை ஊர்வனம் அமைப்பினர் மதுரை சரகம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பாம்பு நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள காட்டுப்பகுதியில் விடப்பட்டது.


Leave a Reply