மாதவிடாய் விடுப்பு அளிப்பது குறித்து ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட குழு அமைப்பு
பெண்கள் முழு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு பெறுவது குறித்த விவகாரத்தை ஆராய, தமிழ்நாடு அரசு 13 நபர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று (செப்டம்பர் 23) தெரிவிக்கப்பட்டது.
மாநிலத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதன் சாத்தியக்கூறுகளை ஆராய மாநில அளவிலான குழுவை அமைக்கவும், பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவதற்கான கொள்கையை உருவாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும் மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து தீர்மானிக்க 13 பெண் உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க மூன்று மாத காலம் அவகாசம் தேவை என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், இந்த முக்கியமான விவகாரத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக மனுதாரரைப் பாராட்டியது. மேலும், அரசு அமைத்த குழு தனது அறிக்கையை ஜனவரி 21, 2027 அன்று சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கை அன்றையைய தினத்திற்கு ஒத்திவைத்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




