தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து இருப்பதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான வடுகப்பட்டி, ஜெயமங்கலம், தேவதானப்பட்டி, சோத்துப்பாறை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மஞ்சலாறு, சோத்துப்பாறை அணை நிரம்பியதால் உபரி நீரை கண்மாய்களில் தேக்கி வைக்கும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரங்களில் இரவு முதல் பெய்து வரும் கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பெய்துவரும் மழையால் செண்பகத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க இரண்டாவது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய மழை பெய்ததால் இரண்டாவது நாளாக குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.