வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊதிய உயர்வு, பதவி உயர்வு, மருத்துவ பணியிடங்களை குறைக்க கூடாது, மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு, முறையான கலந்தாய்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்களில் ஒரு பிரிவினர் ஆறாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு எழுத்துப்பூர்வ உறுதியளித்த போதிலும் அவர்களது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாததே காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு காரணம் எனக் கூறும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடாத மருத்துவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர் .
மருத்துவர்களின் இந்த போராட்டத்தால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களாக பணிக்கு வராத மருத்துவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
பிரேக்கிங் சர்வீஸ் எனப்படும் பணி முறிவு நடவடிக்கை எடுக்கப்பட்டால் மருத்துவர்கள் பணிமூப்பை இழப்பார்கள் என்றும், பணிமூப்பு மூலம் கிடைக்கும் அத்தனை சலுகைகளையும் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் இழக்க நேரிடும் என்றும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.