வெளியானது ‘பிகில்’; கடைசி நேரத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதித்ததால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்

பெரும் சர்ச்சைகளில் சிக்கிய விஜய்யின் பிகில் திரைப்படம் இன்று வெளியானது. கடைசி நேரத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைத்ததால், இரவு முதல் தியேட்டர்களின் வாசல்களில் காத்திருந்த விஜய் ரசிகர்கள் அதிகாலை 4.30 மணிக்கு முதல் காட்சியை கண்டு உற்சாகமடைந்தனர்.

 

விஜய், நயன்தாரா நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவான பிகில் திரைப்படம் தீபாவளி ரிலீசாக இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதிகாலை முதல் சிறப்புக் காட்சிகளாக திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு, டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

 

ஆனால், சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என அரசுத் தரப்பில் முட்டுக்கட்டை விழுந்தது. இதனால் விஜய் ரசிகர்களும், படத்தயாரிப்பு தரப்பும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

இந்நிலையில், பிகில் படத்தின் சிறப்பு காட்சியை திரையிட தமிழக அரசு கடைசி நேரத்தில் அனுமதி அளித்துள்ளது. அரசின நிபந்தனைகளுக்கு உட்பட்டு, திகில் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என்று நேற்றிரவு செய்தி வெளியானது. சிறப்புக் காட்சிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு, தமிழகம் முழுவதும் பிகில் திரைப்படம் திரைக்கு வந்தது. விடிய, விடிய காத்திருந்த விஜய் ரசிகர்கள் , உற்சாகமாக படத்தை கண்டு ரசித்தனர்.


Leave a Reply