சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திமுக மாணவர் அணியினர் உறுப்பினராகி அறிவை விசால மாற்றிக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கை மீண்டும் தொடங்கியிருக்கும் நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று உறுப்பினரானார். இதைத்தொடர்ந்து, கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், தற்போது ஆட்சியாளர்களால் முடக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நூலகத்தில் போட்டித்தேர்வுக்காக படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் இடவசதியை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். திமுக மாணவரணியினர், குறிப்பாக சென்னையில் இருப்போர் உடனடியாக நூலகத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்வதுடன் அனைத்து மாணவர்களும் உறுப்பினர் ஆவதற்கான இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.